ரஜினியின் ரசிகர்களுக்கு இரட்டை சந்தோஷம் காத்திருக்கிறது. கடந்த இரு ஆண்டுகளாக ரஜினி நடித்து, ஷங்கர் இயக்கி வந்த மெகா படமான எந்திரன் வரும்...
ரஜினியின் ரசிகர்களுக்கு இரட்டை சந்தோஷம் காத்திருக்கிறது. கடந்த இரு ஆண்டுகளாக ரஜினி நடித்து, ஷங்கர் இயக்கி வந்த மெகா படமான எந்திரன் வரும் செப்டம்பர் 3-ம் தேதி ரிலீஸாகிறது. இதே தேதியில்தான் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவின் திருமணமும் நடக்கிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளிலும், ஆங்கில சப் டைட்டிலுடன் கூடிய வெளிநாட்டு பதிப்பாகவும் ரூ 180 கோடியில் தயாராகியுள்ளது எந்திரன்.
இந்தப் படத்தை உலகமெங்கும் ஒரே நாளில் வெளியிடுகிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம். நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில், 3000 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்துக்காக ரசிகர்கள் தவம் கிடைக்கின்றனர். ஒருவழியாக படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 3-ம் தேதி படம் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
அதே தேதியில்தான் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவுக்கும் கட்டுமானத் தொழில் அதிபர் மகன் அஸ்வினுக்கும் சென்னையில் திருமணம் நடக்கிறது. செப்டம்பர் 2-ம் தேதி வரவேற்பும், 3-ம் தேதி காலை திருமணமும் ராஜா முத்தையா ஹாலில் நடக்கிறது.
இந்த திருமணத்துக்கு ரசிகர் மன்றப் பிரமுகர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.
ஒரே நாளில் தங்களின் எதிர்ப்பார்ப்புக்குரிய எந்திரனும், விருப்பத்துக்குரிய தலைவர் ரஜினி மகளின் திருமணமும் நடப்பதில் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
ஐஸ்வர்யா - தனுஷ் திருமணத்துக்கு ரசிகர் மன்றத்தினரை அதிகமாக அழைக்காத ரஜினி, இளைய மகள் திருமணத்துக்கு கிட்டத்தட்ட அனைத்து நிர்வாகிகளையுமே அழைத்துள்ளதால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
எந்திரன் ஆடியோ மேலும் சாதனை!
இதற்கிடையே, வெளியாகி ஒரு வாரமாகியும் பெரும் பரபரப்புடன் எந்திரன் ஆடியோ சிடிக்கள் விற்றுத் தீர்ந்தவண்ணம் உள்ளதாக திங்க் மியூசிக் நிறுவனம் கூறியுள்ளது.
முதல்நாள் மட்டும் ஆடியோ விற்பனை மூலம் ரூ 1 கோடி வசூலைத் தாண்டிவிட்டதாகவும், இதுவரை மட்டும் ரூ 5 கோடிக்கும் அதிகமாக வசூலாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Comments
Post a Comment