ஓணம் பண்டிகையையொட்டி திருவனந்தபுரத்தில் நடந்த சுற்றுலா வார விழாவில் நடிகர் கமலஹாசன் கலைத்துறையில் 50 ஆண்டு சேவை செய்த தற்கு பாராட்டி விழா...
சுற்றுலா வார விழா நேற்று மாலை திருவனந்தபுரம் சந்திரசேகரன் நாயர் ஸ்டேடியத்தில் நடந்தது. கேரள உள்துறை அமைச்சர் கோடியேரி பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். முதல்வர் அச்சுதானந்தன் கமலுக்கு சால்வை அணிவித்து வரவேற்று பேசிகையில் ''கமலஹாசன் 50 ஆண் டாக கலைத்துறையில் பெரும் சாதனை படைத்துள்ளார். சினிமாவுக்கு அவர் அளித்த பங்களிப்பை யாராலும் மறக்க முடியாது. இந்திய சினிமாவை உலக தரத்துக்கு உயர்த்துவதில் கமல் மிகப்பெரிய பங்காற்றியுள்ளார் என்றார்.
விழாவில் நடிகர் கமலஹாசன் பேசியதாவது: எனக்கு ஒரு மாநிலமே பாராட்டு விழா நடத்துவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. பல வருடங்களுக்கு முன் இதே திருவனந்தபுரம் நகரில் நான் ஒரு சாதாரண கலைஞனாக வந்தேன். இப்போது எனக்கொரு விழா எடுப்பது மிகுந்த கவுரவமாக உள்ளது. கமலஹாசன் ஒரு தமிழன், பாண்டிய நாட்டை சேர்ந்தவன் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் முப்பது வயதுக்கு குறைந்தவர்கள் தான் அப்படி கூறுவார்கள். உண்மையில் கமலஹாசன் என்ற நடிகனை வளர்த்தது மலையாள சினிமா தான் என்பது அவர்களுக்கு தெரியாது. அதற்கு பிறகு தான் கே.பாலசந்தர் என்னை தமிழில் நாயகனாக அறிமுகப்படுத்தினார்.
கலைஞர்களுக்கு எல்லை கோடு விதிப்பது ஏற்கதக்கதல்ல. எனது ரசிகர்கள் ஆயிரம் பேர் நாளை திருவனந்தபுரத்தில் கண் தானம் செய்ய உள்ளனர். இதன் மூலம் எனது தமிழ் ரசிகர்கள் கேரளாவுக்கு ஒளி கொடுக்க உள்ளனர். தமிழர்களின் சகோதரத்துவம் இதன் மூலம் உலகிற்கு வெளிச்சம் காட்டப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். விழாவில் அமைச்சர்கள் சுரேந்திரன்பிள்ளை, திவாகரன், எம்.ஏபேபி, டைரக்டர்கள் கே.மது,சாஜி கைலாஸ், பிரயதர்ஷன், சேது மாதவன் மற்றும் கவுதமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment