படம் ஓடாமல் நஷ்டம் ஏற்பட்டால் நடிகர்களிடம் நஷ்டஈடு கேட்க கூடாது என்று நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தெ...
படம் ஓடாமல் நஷ்டம் ஏற்பட்டால் நடிகர்களிடம் நஷ்டஈடு கேட்க கூடாது என்று நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம், சென்னை தியாகராயநகரில் உள்ள நடிகர் சங்க கட்டிடத்தில் நடந்தது. கூட்ட முடிவில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:
* தமிழ் திரைப்பட நடிகர்கள், தொழிலாளர்களுக்காக நலவாரியம் அமைக்கப்படும் என்று அறிவித்ததற்காகவும், நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு வீடு கட்டிக்கொள்ள நிலம் ஒதுக்கியதற்காகவும் முதல்வர் கருணாநிதிக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவிக்கிறது.
* இலங்கை தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்க துரித நடவடிக்கை எடுக்க மத்திய - மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறது.
* சமீபகாலமாக திரைப்பட கலைஞர்கள் தொழில் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் இலங்கை செல்வதை தனிப்பட்ட ஒரு சிலர் விமர்சிப்பதையும், பத்திரிகைகள் வாயிலாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று குரல் கொடுப்பதையும், தனிப்பட்ட முறையில் மிரட்டுவதையும் நடிகர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. கலையுலகை சேர்ந்தவர்கள் தொழில் ரீதியாகவோ, வர்த்தக ரீதியாகவோ, தனிப்பட்ட முறையிலோ இலங்கை செல்லலாமா, வேண்டாமா என்பது பற்றி கலையுலகை சார்ந்த அனைத்து அமைப்புகள் கொண்ட கூட்டு கலந்தாய்வு குழுவே முடிவு எடுக்கும். நடிகர் சங்க உறுப்பினர்கள் அதன் முடிவுக்கு கட்டுப்பட்டே செயல்படுவார்கள்.
* திரைப்படங்களில் பணிபுரியும் நடிகர் சங்க உறுப்பினர்கள் வெறும் தொழிலாளர்களே. திரைப்படத்தின் வர்த்தகத்தில் ஏற்படும் லாப - நஷ்டங்களுக்கு நடிகர்கள் பொறுப்பல்ல. திரைப்பட வர்த்தகத்தை சேர்ந்தவர்கள் லாப - நஷ்டங்களுக்கு நடிகர் சங்க உறுப்பினர்களை பொறுப்பாக்க முடியாது. அவர்களிடம் நஷ்டஈடு கேட்கக் கூடாது.
* தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகிய அமைப்புகளுடன் நடிகர் சங்கம் போட்டுள்ள ஒப்பந்தத்தின்படி, நடிகர் சங்கத்தில் உறுப்பினரான பிறகே தமிழ் திரைப்படங்களில் நடிக்க முடியும். உறுப்பினர்கள் ஆகாத நடிகர்கள், ஆகஸ்டு 15ம்தேதிக்குள் உறுப்பினர்கள் ஆக வேண்டும். இல்லையென்றால் உறுப்பினர் அல்லாத கலைஞர்களுடன் நடிகர் சங்க உறுப்பினர்கள் பணிபுரிய மாட்டோம்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
Comments
Post a Comment