‘உயிர்’ படத்தில் கொழுந்தன் மீது அண்ணி காதல் கொள்ளும் கதையை இயக்கியவர் சாமி. இந்தப் படம் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, ‘மிருக...
‘உயிர்’ படத்தில் கொழுந்தன் மீது அண்ணி காதல் கொள்ளும் கதையை இயக்கியவர் சாமி. இந்தப் படம் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, ‘மிருகம்’ படத்தை இயக்கினார். இந்தப் படத்தின் ஹீரோயின் பத்மபரியாவை கன்னத்தில் அடித்ததால் மீண்டும் பரபரப்பானார் சாமி. இதையடுத்து இவர் இயக்கிய படம் ‘சரித்திரம்’. இந்தப் படம் முடியவில்லை. இப்போது, ‘சிந்து சமவெளி’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் கதை சர்ச்சையை ஏற்படுத்தும் என்று கோடம்பாக்கத்தில் கூறப்படுகிறது.
இதுபற்றி சாமியிடம் கேட்டபோது கூறியதாவது: நான் இயக்குவது சர்ச்சையான கதை அல்ல. யாரும் சொல்ல துணியாத கதையை சொல்லியிருக்கிறேன். உடம்புக்கும் புத்திக்கும் நடக்கும் போராட்டம்தான் வாழ்க்கை. அந்த வாழ்க்கையில் பல்வேறு சம்பவங்கள் நடக்கின்றன. அதில் நல்லதும் இருக்கிறது. கெட்டதும் இருக்கிறது. நல்லதை மட்டுமே பேசி வருகிறோம். கெட்டதை தவறு என்று பேசப்பயப்படுகிறோம். அதைதான் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறேன். இது, ரஷ்ய எழுத்தாளர் இவான் துர்கேனியூ என்பவரின் வாழ்க்கை அனுபவத்தை தழுவி எடுக்கப்பட்ட கதை. காதலுக்கும் காமத்துக்கும் உள்ள போராட்டத்தை யதார்த்தமாக சொல்லியிருக்கிறேன். இது சர்ச்சை கதை அல்ல. இவ்வாறு சாமி கூறினார்.
Comments
Post a Comment