ஹைதராபாத்: பிரபல தமிழ், தெலுங்கு பட வில்லன் நடிகர் கோட்டா சீனிவாச ராவின் ஒரே மகன் வெங்கட சாய்பிரசாத் பைக் விபத்தில் பலியானார். ஆந்திர ...
ஹைதராபாத்: பிரபல தமிழ், தெலுங்கு பட வில்லன் நடிகர் கோட்டா சீனிவாச ராவின் ஒரே மகன் வெங்கட சாய்பிரசாத் பைக் விபத்தில் பலியானார்.
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பிலிம் நகரில் வசிக்கிறார் கோட்டா சீனிவாச ராவ்.
இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் வில்லன் நடிகராக நடித்துள்ளார். சாமி, குத்து, திருப்பாச்சி, சமீபத்தில் வந்த கனகவேல் காக்க என ஏராளமான தமிழ்ப் படங்களில் நடித்து புகழ் பெற்றவர். மேலும் இவர், ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியின்போது எம்.எல்.ஏவாகவும் இருந்துள்ளார்.
இவருடைய ஒரே மகன் வெங்கட சாய்பிரசாத் (39). இவரும் தெலுங்கு படங்களில் நடிகராக நடித்து வந்தார். தெலுங்கில் ஜெகபதி பாபு நடிப்பில் வெளிவந்த சித்தம் உள்பட 3 படங்களில் நடித்துள்ளார்.
லாரி- பைக் மோதல்:
நேற்று ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் மதிய உணவு சாப்பிடுவதற்காக வெங்கட சாய்பிரசாத் பைக்கில் சென்றார்.
இந்த நவீன பைக்கை சமீபத்தில்தான் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தார்.
இவரது மனைவி மற்றும் 2 மகன்களும் அவரது பைக்குக்குப் பின்னால் காரில் சென்று கொண்டிருந்தனர்.
ஹைதராபாத்தில் நார்சிங் என்ற இடத்தின் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே மின்னல் வேகத்தில் வந்த லாரி ஒன்று வெங்கட சாய்பிரசாத்தின் பைக் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் பைக்கிலிருந்து இருந்து தூக்கி வீசப்பட்ட சாய்பிரசாத் தலையில் படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனே, அவரை மீட்டு ஹைதராபாத்தில் உள்ள லங்கர் ஹவுஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று மாலை உயிரிழந்தார்.
இதையடுத்து அவருடைய உடல் உஸ்மானியா மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.
விபத்து நடந்தபோது வெங்கட சாய்பிரசாத்தின் தந்தை நடிகர் கோட்டா சீனிவாசராவ் வெளியூரில் படப்பிடிப்பில் இருந்தார். தகவல் அறிந்த அவர் கதறி அழுதபடி ஹைதராபாத் திரும்பினார்.
தகவல் அறிந்ததும் சாய் பிரசாத்தின் வீட்டிற்கு தெலுங்கின் முன்னணி நடிகரும், பிரஜா ராஜ்யம் கட்சியின் தலைவருமான சிரஞ்சீவி சென்று ஆறுதல் கூறினார். அவருடன் தம்பியும், நடிகருமான பவன் கல்யாண் மற்றும் அவருடைய மைத்துனர் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் ஆகியோரும் சென்றிருந்தனர்.
பாஜக தலைவர்களில் ஒருவரான வெங்கையா நாயுடு, மற்றும் மாநில தலைவர் கிஷண் ரெட்டி, மற்றும் முன்னாள் அமைச்சர் வித்யாசாகர் ராவ் ஆகியோரும் சாய் பிரசாத் வீட்டுக்கு சென்று அவருடைய தந்தை மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
நடிகர் ஜெகபதி பாபு, நடிகர் கிருஷ்ணம் ராஜு, நடிகைகள் ஜெயசுதா, டிஸ்கோ சாந்தி மற்றும் அவருடைய கணவர் ஸ்ரீஹரி உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட திரைப்படத்துறையினர் கோட்டா சீனிவாசராவுக்கு ஆறுதல் கூறினர்.
சாய்பிரசாத், தெலுங்கில் ஜெகபதி பாபு நடித்து வெளியான சித்தம் திரைப்படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் தோன்றியுள்ளார். மேலும், தனது தந்தை கோட்டா சீனிவாசராவுடன் இணைந்து ஞாயம்-2 என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
சாய்பிரசாத்தின் இறுதி சடங்கு நாளை ஹைதராபாத்தில் நடக்கிறது.
Comments
Post a Comment