வலிக்கிறது மனது - Tele Chips

காலை எழுந்தவுடன் பக்தியைத்தேடி சானல்களைத் திருப்பியபோது விஜய் தொலைக்காட்சியின் பாரதத்தில் தர்மம் நிகழ்ச்சியில் நம்மை ஈர்த்தவர் வேளுக்குடி கிருஷ்ணன். மகாபாரதத்தில் கேள்வி பதில்களாகப் போதிக்கப்படும் தர்மத்தை நேயர்களுக்கு விளங்கும்படியாக, எளிமையான உதாரணங்களுடன் எடுத்துரைத்தார் வேளுக்குடியார். அவா, வெகுளி, அழுக்காற்றைக் கடந்து மனதைத் தெளிவாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், மனதால் உலகத்தாருக்கு நன்மையை மட்டுமே நினைக்க வேண்டும் என்றும் அவர் விளக்கியபோது, மக்களுக்கு நீதி, நேர்மை, நியாயம் போன்ற உலக தர்மங்களைப் போதிக்க, பாரதத்தில் கையாளப்பட்டுள்ள கேள்வி - பதில் உத்தி நம்மை வியக்கவைத்தது.  
பொறுமைகளுள் சிறந்தது இரட்டையைப் பொறுப்பது என்று கூறிவிட்டு, அது என்ன இரட்டை என்பதை விளக்குவதற்குள் விளம்பர இடைவேளையைச் செருகி, தங்கள் வியாபார சாமர்த்தியத்தைக் காட்டினர், விஜய் தொலைக்காட்சியினர். மீண்டும் நிகழ்ச்சி தொடங்கும்வரை இரட்டை சஸ்பென்ஸ் நீடித்தது. சஸ்பென்ஸ், சினிமாவிலும், சீரியல்களிலும் மட்டும்தான் இருக்கவேண்டுமா என்ன? 
விஜய் தொலைக்காட்சியிலிருந்து வெளியே வந்து பொதிகையில் புகுந்தால், அங்கும் வேளுக்குடியார்தான். ஸ்ரீமத் பாகவதத்தை  கண்ணபிரான் கனியமுதமாக வழங்கிக்கொண்டிருந்தார் அவர். சித்த சுத்தியுடன், அவரவர்க்கு விதிக்கப்பட்டுள்ள தர்மத்தை நிஷ்சிந்தையாகச் செய்ய வேண்டியதன் அவசியத்தையும், அதனால் கிட்டும் பலன்களையும் எடுத்துரைத்தார். மனதால், பேச்சால், உடலால் பிறரைத் துன்புறுத்தக்கூடாது என்பதை மனதில் பதியும்படி கூறிய வேளுக்குடி கிருஷ்ணனை, சிறைச்சாலைதோறும் உபன்யாசம் செய்ய அனுப்பினால், குற்றவாளிகள் அனைவரையும் தமது பேச்சாற்றலால் கவர்ந்து, திருத்திவிடுவார் என்று தோன்றியது. முயற்சிக்கலாமே! 
தொலைக்காட்சி செய்தி என்றால் வாசிப்பாளர்கள் அவசியமா என்ன? இல்லை, என்கிறது கேப்டன் தொலைக்காட்சி. அதில் ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ள நிகழ்வுகள் என்கிற தலைப்பிலான நிகழ்ச்சி, வரவிருக்கும்  செய்திகளுக்கான முன்னோட்டமா? அல்லது  கேப்டன் செய்திகளே அதுதானா என்று தெரியவில்லை.  தலைப்புச் செய்திகளோ, இண்டர்ஹெட்களோ இல்லாதது மட்டுமல்ல, செய்தி வாசிப்பாளரே இல்லாததும் ஒரு புதுமைதான். இவையெல்லாம் இருந்துதான் ஆகவேண்டும் என்று கட்டாயமா என்ன? இப்படியும்தான் ஒரு சானலில் செய்திகள் வரட்டுமே! 
வெள்ளிக்கிழமை இரவு விஜய் தொலைக்காட்சியில் அழகிய தமிழ்மகன் என்றொரு நிகழ்ச்சி. பெண்களின் மனங்களைப் புரிந்தவரைக் கண்டுபிடித்து, அழகிய தமிழ்மகனாகத் தேர்ந்தெடுப்பார்களாம். ஜெயா டிவியின் ஜாக்பாட் பாணியில், சர்வே மூலம் பெறப்பட்ட பதில்களுடன் பங்கேற்போரின் பதில்கள் ஒப்பிடப்பட்டு, மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. நூலகத்திற்கோ,  கோவிலுக்கோ செல்வது, படுக்கையறையில் கடவுள் படமோ, புத்தகமோ வைத்திருப்பது, வீட்டைத் தூய்மையாக வைத்துக்கொள்வது, ஏழைகளுக்கு உதவும் இரக்க குணம் போன்ற பண்புகள் பெண்களிடத்தில் இருக்கும் என்று நினைப்பவர்கள் இந்தப் போட்டிக்குப் பக்கத்தில்கூட வரக்கூடாது என்பது புரிந்தது. 
பெண்கள் மாதத்திற்கு ஒருமுறையாவது செல்லும் இடம்  பியூட்டி பார்லர் என்பதையும், படுக்கையறையில் பாய்ஃப்ரெண்டின் படத்தை வைத்துக்கொள்வார்கள் என்பதையும், வீட்டைச் சுத்தப்படுத்துவது பெண்களுக்குப் பிடிக்காத விஷயம் என்பதையும் அறிந்து, புரிந்துகொண்டவர்கள்தான் 'அழகிய தமிழ்மகனாக' இந்தப் போட்டியில் வெற்றிபெற முடியும் என்பது நிகழ்ச்சியைப் பார்த்தபோது நமக்கு விளங்கியது. தமிழ்மகன்களுக்கு இப்படி ஒரு சோதனையா? 
னிக்கிழமை உலகெங்கும் உழைப்பாளர் தினம் கொண்டாடுகையில் தமிழ்த் தொலைக்காட்சிகளும் (வியாபார) வாய்ப்பைத் தவறவிடாமல், வழக்கம்போல் மே தினச் சிறப்பு நிகழ்ச்சிகளை அள்ளி வீசின. கலைஞர் தொலைக்காட்சியின் உழைப்பாளர் நிகழ்ச்சியில், உழைப்பாளர்களின் பேட்டிகளையும், சில சினிமா பாடல்களையும் கலந்து வழங்கினார்கள். 'மாடு மேய்ப்பேன், சாப்பிடுவேன், தூங்குவேன்' என மாடு மேய்ப்பவரும், 'கடை வைத்துப் பிழைக்க ஆசை, ஆனால் முடியவில்லை' என்று கூலித்தொழிலாளியும், ஆட்டோக்களின் வருகையால் வருமானம் முன்போல் இல்லை என ரிக்ஷாகாரரும் பேட்டியளித்தனர்.  உழைப்பாளர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா, வேதனையில் வாடுகிறார்களா மே தினத்தைக் கொண்டாடுகிறார்களா, இல்லையா? இந்த நிகழ்ச்சி மூலம் என்ன சொல்ல வந்தார்கள் எனப் புரியவில்லை நமக்கு.
 
பாசத்தலைவனுக்கு பாராட்டு விழாவின் மறு ஒளிபரப்பும் கலைஞர் தொலைக்காட்சியின் உழைப்பாளர் தினச் சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒன்று. அந்த நிகழ்ச்சியில், திரையில் காட்டப்பட்ட சிவாஜி நடித்த படத்தின் காட்சி ஒன்றைப் பார்த்துவிட்டு, "கலைஞர் விக்கி விக்கி அழுதார்' என்று கூறினார் ரஜினி. இந்த நிகழ்ச்சியை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பினால், தொலைக்காட்சி நேயர்களும் விக்கி விக்கி அழ ஆரம்பித்து விடுவார்கள் என்பதை கலைஞர் தொலைக்காட்சியினர் உணர்ந்துகொண்டால் சரிதான்.        
ன் தொலைக்காட்சியில் எப்போதும்போல மே தினச் சிறப்பு நிகழ்ச்சிகளை ஆக்கிரமித்துக்கொண்டது திரையுலகம்தான். காலையில் நடிகர் ஸ்ரீகாந்த்தையும் யாரோ ஒரு நடிகையையும் பேட்டி கண்டு  உழைப்பாளர்களுக்குப் பெருமை சேர்த்துவிட்டு, அதற்கு மேலும் வலுக்கூட்ட ராதிகாவையும்  சரத்குமாரையும் அழைத்திருந்தது சன் தொலைக்காட்சி. சரத்குமாரின் கடின உழைப்பில்(உழைப்பாளர் தினமல்லவா?) உருவான காஃபியை அருந்திவிட்டு, இருவரும் கடற்கரைக்கு வந்து, உழைப்பின் பெருமைகளையும் உழைப்பாளர் தினத்தின் அருமைகளையும் ரசிகர்களுக்கு விளக்கினார்கள். பின்னர் வீட்டிற்குச் சென்றும் பேச்சைத் தொடர்ந்தார்கள். சரத்குமாருக்குப் பிடித்த நடிகைகள் சினேகாவும், நமீதாவும் என்கிற, உழைப்பாளர்களுக்கு மிகவும் பயனளிக்கும்  விஷயத்தை இந்த உழைப்பாளர் தினச் சிறப்பு நிகழ்ச்சி மூலம் அறிந்துகொள்ள முடிந்தது நமது பாக்கியமே! 
முன்தினம், வாணியம்பாடியில் 5 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்த சோகத்தைப் பற்றிய எண்ணமோ, இதுபோன்ற சோகங்கள் நிகழாமல் தவிர்ப்பதற்கு உண்டான விழிப்புணர்வை, உழைப்பாளர் தினத்தன்றாவது ஏற்படுத்த வேண்டும் என்கிற அக்கறையோ இல்லாமல், சினிமாவையும், சினிமாக்காரர்களையும் வைத்து, உழைப்பாளர் தின சிறப்புக் கொண்டாட்டம் எனக் கூத்தடித்த சானல்களைப் பார்த்தபோது - மனது வலித்தது.

Comments

Post a Comment

Most Recent