யு.எப். மீடியாவிலிருந்து புறப்பட போகிறது யு.எப்.எக்ஸ் எனும் புதிய மியூசிக் சேனல். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளி...
யு.எப். மீடியாவிலிருந்து புறப்பட போகிறது யு.எப்.எக்ஸ் எனும் புதிய மியூசிக் சேனல். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நிகழ்ச்சிகள் களம் இறங்க போகிறது. ஆங்கிலம் மற்றும் ஹிந்தியிலும் அவ்வப்போது நிகழ்ச்சிகள் வந்து போகுமாம். மியூசிக் தவிர வெளிநாட்டு பண்டிகை கொண்டாட்டங்கள், தென்னிந்தியாவின் அடையாளங்கள் போன்ற பயணங்களும் இருக்குமாம். பலோமா உள்ளிட்ட எஸ்.எஸ்.மியூசிக் ஆள்களும் இழுக்கப்பட்டுள்ளனர்.
விஜய் அவார்ட்ஸ் விழாவுக்காக இந்த முறையும் திரளப் போகிறதாம் தமிழ்த் திரையுலகம். சிறந்த நடிகர், படம் என கடந்த ஆண்டுக்கான சிறந்த சினிமா படைப்பாளிகளை கௌரவிக்கப் போகிறார்கள். கடந்த முறையைப் போல் இந்த முறையும் கமல்ஹாசனுக்கே விருது கொடுக்கப்படலாம் என தெரிகிறது. வரும் 29-ம் தேதி சென்னையில் நடக்கும் இந்த விழா பின் விஜய் டி.வி.யில் தொகுப்பாக வெளிவருகிறது.
சென்னைக்குள்ளேயே சுற்றி வந்த மக்கள் டி.வி.யின் "சின்ன சின்ன ஆசை' இனி சென்னைக்கு வெளியே உள்ள குழந்தைகளின் ஆசைகளையும் நிறைவேற்றி வைக்கப் போகிறதாம். இந்த முறை கோவைக்கு சென்று அங்குள்ள குழந்தைகளின் சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றி வந்திருக்கிறார் ஆர்த்தி. இனி ஒவ்வொரு மாவட்டமாக தொடரும் ஆர்த்தியின் பயணம் குழந்தைகளின் சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றப் போகிறதாம்.
'நடந்தது என்ன?', "நிஜம்', "நம்பினால் நம்புங்கள்' என இரவு நேரங்களை திரில்லர் ஆக்கி வரும் தொலைக்காட்சிகள் வரிசையில் மக்கள் டி.வி.யும் சேர்ந்திருக்கிறது. வினோத நிகழ்வுகள், பார்த்திராத காட்சிகள், நம்பிக்கைகளின் அடிப்படையில் மாறிப் போன கிராமங்கள், வியக்க வைக்கும் கிராமத்து சுவடுகள் என பயம் காட்டப் போகிறார்களாம். "உண்மை' என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8.30-க்கு ஒளிபரப்பாகிறது.
"ராவணன்' படத்துக்கான புரோமோஷன் வேலைகளில் கவனம் செலுத்தி வரும் ஐஸ்வர்யாராயை வைத்து "எந்திரன்' படத்துக்கான புரோமோஷனை ஆரம்பிக்கப் போகிறதாம் சன் பிக்சர்ஸ். இந்தியா மற்றும் சில வெளிநாட்டுப் பயணங்களும் அதில் இருக்குமாம். அதற்கு முன் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ரஜினி, ஐஸ்வர்யாராய், ஷங்கர் உள்ளிட்ட படக்குழு படத்தை பற்றிய விஷயங்களை சன் டி.வி.யில் பகிர்ந்து கொள்ளப்போகிறது.
டிஸ்கவரியில் ஒளிபரப்பாகி வரும் "கிளாஷ் ஆஃப் டைனோசர்ஸ்' தொடர் டைனோசர்கள் பற்றிய ஆழ்ந்த பார்வையைத் தருகிறது. 12 கோடி வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த அனைத்து விலங்குகளுமே ராட்சஸ உடலமைப்பைக் கொண்டவை. அவற்றின் வேகம், கண்பார்வை, மூளைத் திறன் ஆகியவற்றைப் பற்றிய தெளிவான பார்வையைத் தரப் போகிறது. டைனோசர்கள் உள்ளிட்ட விலங்குகள் பற்றிய புதிய தகவல்களை இதில் பார்க்கலாம்.
பொது மக்கள் தங்கள் பகுதி பிரச்னைகள் குறித்து நேரடியாக சென்னை மேயரிடமே பேச ஜீ தமிழ் தொலைக்காட்சி ஏற்பாடு செய்துள்ளது. "மக்களின் மனசாட்சி' நிகழ்ச்சி மூலம் பிரச்னைகளை கேட்டறிந்த பின் மாநகராட்சிக்குட்பட்ட பிரச்னைகள் உடனடியாக தீர்க்கப்படுகிறதாம். மக்களின் புகாரின் பேரில் எடுக்கப்படும் நடவடிக்கைகளும் ஒளிபரப்பாவதுதான் இந்த நிகழ்ச்சியின் ஸ்பெஷல்.
கேப்டன் தொலைக்காட்சியும் உலக சினிமாக்களை கையில் எடுக்கப் போகிறது. "உலக சினிமா' என்ற பெயரில் வரப் போகிற இந்த நிகழ்ச்சியில் புகழ் பெற்ற சினிமாக்களை தினந்தோறும் ஒளிப்பரப்பப் போகிறார்களாம். இதற்காக சில வெளிநாட்டு நிறுவனங்களிடம் ராயல்டி முறையில் சில சினிமாக்கள் பெறப்பட்டுள்ளது. சில தமிழ் சேனல்களிடமும் ஹாலிவுட் சினிமாக்களைப் பெற்றுள்ளார்களாம்.
வழக்கம் போல் இந்த முறையும் ஜூன்-3ம் தேதி சித்திரம் என்ற கார்ட்டூன் தொலைக்காட்சியை களம் இறக்குகிறது கலைஞர் குழுமம். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான இந்த தொலைக்காட்சியில் உலகப் புகழ் பெற்ற கார்ட்டூன் படங்களை இறக்கப் போகிறார்களாம். இதைத் தொடர்ந்து ஜெயா குழுமமும் ஒரு கார்ட்டூன் சேனலுக்கான திட்டத்தை வைத்திருக்கிறதாம். வரும் ஆண்டில் அதன் தொடக்கம் இருக்குமாம்.
Comments
Post a Comment