கலைஞர் டி.வி.க்காக மற்றொரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப் போகிறது கணேஷ் - ஆர்த்தி ஜோடி. முழுக்க முழுக்க முதியவர்களை சந்தோஷப...
கலைஞர் டி.வி.க்காக மற்றொரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப் போகிறது கணேஷ் - ஆர்த்தி ஜோடி. முழுக்க முழுக்க முதியவர்களை சந்தோஷப்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சியை களம் இறக்குகிறது கலைஞர்டிவி குழுமம். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் டான்ஸ், காமெடி உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் இருக்குமாம். வாரம் ஒரு சிறப்பு விருந்தினரும் உண்டாம்.
திருமணத்துக் குப் பின் முதன் முறையாக டி.வி. நிகழ்ச்சிக்கு வருகிறார் அமலா. விஜய் டி.வி.யின் "சூப்பர் மாம்' நிகழ்ச்சிக்காக தமிழகத்தின் சிறந்த அம்மாக்களை தேர்வு செய்யப் போகிறார். நாகார்ஜுனாவை திருமணம் செய்து கொண்ட பின் புளூ கிராஸ் உறுப்பினர், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் ஈடுபாடு என்றிருந்த அமலாவுக்கு சீரியல், சினிமா, டி.வி.ஷோ என வாய்ப்புகள் வந்த நிலையில் ரியாலிட்டி ஷோவை டிக் அடித்தது நாகார்ஜுனாவாம்.
"நிஜம்', "நடந்தது என்ன', "நம்பினால் நம்புங்கள்' என சேனல்கள் போட்டிப் போட்டு இரவு நேரங்களை த்ரில்லர் ஆக்கி வரும் வேளையில், புதிய வரவான கேப்டன் டி.வி.யும் த்ரில்லர் ஷோவை இறக்கப் போகிறதாம். வழக்கமான மூட நம்பிக்கை பாணிகளில் பயணிக்காமல் சேரி பகுதி மக்களின் வாழ்க்கை முறை, கிராம மக்களின் வாழ்க்கை நிலை, நகர வாழ்க்கையின் சிரமங்கள் என வரிசைப்படுத்தப் போகிறார்களாம். நிகழ்ச்சிக்கு பெயர் தேடும் படலமும் தொடங்கி விட்டது.
கோடை விடுமுறையில் சிறுவர்களை கவரும் வகையில் "இஷான்' என்ற தொடரை களம் இறக்குகிறது டிஷ்னி குழுமம். ஒரு சிறுவனின் இசைப் பயணத்தை ஊக்குவிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தொடர் முழுக்க முழுக்க இசைச் சார்ந்த நாடக வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. பிரபல சீரியல் இயக்குநர் ஜெயடி சர்க்கார் இயக்கியுள்ள இந்தத் தொடரை மே 15 முதல் காணலாம்.
சென்னை முட்டுக்காடு பகுதியில் பிரமாண்ட பங்களாவை கட்டி வருகிறார் சிம்ரன். இதற்காக அதன் அருகிலேயே வாடகைக்கு வீடு எடுத்து, கட்டடப் பணிகளை கண்காணித்து வருகிறார். பங்களா பணிகள் முடிந்த பின் சினிமா மற்றும் சீரியல்களில் மும்முரமாக ஈடுபடப் போகிறார். தன் படங்களில் பணியாற்றிய சில உதவி இயக்குநர்களுக்கு முதல் சினிமா வாய்ப்பைத் தரப் போகிறாராம்.
சினிமா வாய்ப்புகள் குறைந்த நிலையிலும், விளம்பர வாய்ப்புகளில் நடிகைகளைப் போல் கவனம் செலுத்துகிறார்கள் நடிகர்கள். மோகன்லாலுடன் வேஷ்டி விளம்பரத்தில் வலம் வருகிறார் சரத்குமார். நகைக்கடை விளம்பரங்களுக்கு பெயர் போன பிரபு மேலும் சில புதிய விளம்பரங்களில் வருகிறார். கார்த்திக்கும் விளம்பரங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம். விளம்பர கவனத்தில் சிவமைந்தன் முக்கியமானவர்.
விளம்பரங்கள், பார்ட்டி என ஐ.பி.எல். கொண்டாட்டத்தில் இருந்த பாலிவுட் நடிகைகளில் சிலர், 20-20 உலகக் கோப்பை போட்டிகளை பார்க்க மேற்கிந்திய தீவுகளுக்கும் சென்று விட்டார்களாம். ப்ரித்தி ஜிந்தா, ஷில்பா ஷெட்டி, தீபிகா படுகோன், பிபாஷா பாசு என நீளகிறது இந்தப் பட்டியல். சமீரா ரெட்டி, ஜெனிலியா என சிலர் புறப்படத் தயாராகி வருகிறார்கள்.
தனது ஒவ்வொரு பிரேமிலும் அதிர வைக்கும் பேரழிவுகளை படமாக்கி உள்ளார் ரான் பிட்ஸ். பெரும் கட்டிடங்கள் திட்டமிட்டு தகர்க்கப்படுவதிலிருந்து, பெரும் சூறாவளி, நடு வானில் நிகழும் பேரழிவு மோதல், எதிர்பாராத தீவிரவாதத் தாக்குதல் என பல்வேறு பேரழிவுகளை டிஸ்கவரி சேனலின் "டெஸ்ட்ராய்ட் இன் செகன்ட்ஸ்' என்ற தொடருக்காக படம் பிடித்திருக்கிறார். வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
"சேலஞ் சஸ் ஆஃப் லைஃப்' என்ற பெயரில் புதிய தொடரை களம் இறக்கப் போகிறது டிஸ்கவரி குழுமம். பல கண்டங்களையும், வாழ்விடங்களையும் தழுவிய இந்தத் தொடரை 70 ஒளிப்பதிவாளர்கள் 3000 நாள்கள் படமாக்கியிருக்கிறார்கள். உயிரினங்கள் தங்கள் இனம் தொடர்ந்து நீடித்து வாழ்வதற்காக செய்யும் செயல்களை இந்தத் தொடர் படம் பிடித்து காட்டப்போகிறது. விலங்குகள் வேட்டையாடப்படும் கென்யா காடுகளின் த்ரில்லர் வேட்டைகளும் இடம் பெறுகிறது.
Comments
Post a Comment