Entertainment
›
Cine News
›
I am still confident on my Pen - CM | என் எழுத்தின் மீது இன்னும் நம்பிக்கை இருக்கிறது: முதல்வர் கருணாநிதி
I am still confident on my Pen - CM | என் எழுத்தின் மீது இன்னும் நம்பிக்கை இருக்கிறது: முதல்வர் கருணாநிதி
சென்னை, மே 1: எழுதும் வல்லமை உள்ளதால் என் எழுத்தின் மீது இன்னும் நம்பிக்கை இருக்கிறது என முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். முதல்வர் கருணாந...
சென்னை, மே 1: எழுதும் வல்லமை உள்ளதால் என் எழுத்தின் மீது இன்னும் நம்பிக்கை இருக்கிறது என முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
முதல்வர் கருணாநிதி கதை, திரைக்கதை, வசனத்தில் உருவாகியுள்ள புதிய படம் "பெண் சிங்கம்'. இது கருணாநிதியின் 75-வது படம். இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கருணாநிதி மேலும் பேசியதாவது:
இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் ஜெயமுருகனும், முருகேசனும் எளிமையானவர்கள். படங்களின் மூலம் நல்ல கருத்தை மக்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணமுடையவர்கள்.
÷என் கலையுலக வாழ்க்கையில் தொடக்கத்தில் சில ஏமாற்றங்கள் ஏற்பட்டன. அபிமன்யு, ராஜகுமாரி, மருதநாட்டு இளவரசி போன்ற படங்களின்போது அவை நடைபெற்றன.
அதன்பிறகே நிலையான இடம் கிடைத்தது. ஒரு சமயம் என்னுடைய பெயரை தலைப்பில் போட மறுத்தவர்கள், பிற்காலத்தில் நீங்கள் கதை எழுதாவிட்டாலும் உங்கள் பெயரைப் பயன்படுத்திக் கொள்கிறோம் என கூறியதுண்டு.
திரைப்படத் துறையில் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் ஆகியோரோடு பழகியதையும் உரையாடியதையும் இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன். கலைவாணரையும் மறக்கவில்லை. கலைவாணர் அரங்கம் பல கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்படவுள்ளது. நான் நீண்ட நாள் வாழ வேண்டும் என கமல், வைரமுத்து, வாலி உள்ளிட்ட பலரும் தெரிவித்தனர்.
என் மீது அவர்களுக்கு கோபம் ஏன் எனத் தெரியவில்லை. நான் வாழ்ந்தது போதாதா? 86 வயதில் இடையிடையே பட்ட துன்பங்கள் போதாதா? என்னால் இயன்ற அளவு நற்காரியங்களை செயல்படுத்தியுள்ளேன். இளைஞர்களுக்கு வழிவிட்டு நான் விலக நினைத்தாலும் நான் சார்ந்திருக்கும் துறையினர் என்னை விடுவதில்லை.
÷நான் சிறுவயது முதல் எழுத்தில் தீராத ஆர்வம் கொண்டிருந்தேன். அதுதான் என்னை இந்த நிலைக்கு உயர்த்தியிருக்கிறது. சில நேரங்களில் என்னை உணராதவர்கள், என் எழுத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் அன்றும் இருந்தார்கள், இன்றும் இருக்கிறார்கள். ஆனால் நான் தமிழால் உயர்ந்தேன்.
நான் இந்த அளவுக்கு வளர கலையுலகினரான நீங்கள்தான் காரணம் என்பதை மறக்க முடியுமா? இன்று பலருக்கும் ஏராளமான நன்மைகளைச் செய்ய உத்தரவிடும் அளவுக்கு என் பேனா என்னை உயர்த்தியிருக்கிறது.
÷உயிர் காப்பீட்டுத் திட்டங்களின் மூலம் ஆயிரக்கணக்கானோர் பயன் பெற்றிருக்கிறார்கள். அவர்களது குடும்பத்தினரின் வாழ்த்துகளோடும் லட்சக்கணக்கானோரின் வாழ்த்துகளோடும் பணி தொடரும். "பெண் சிங்கம்' படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
Comments
Post a Comment