Vadivelu complaints on Singamuthu | மிரட்டுகிறார் சிங்கமுத்து! - வடிவேலு புகார்

http://thatstamil.oneindia.in/img/2010/04/11-vadivel-200.jpg
சென்னை: நான் தொடர்ந்துள்ள வழக்குகளை வாபஸ் வாங்கும்படி நடிகர் சிங்கமுத்து என்னை ஆட்களை வைத்து மிரட்டுகிறார், என்று நடிகர் வடிவேலு புகார் தெரிவித்துள்ளார்.

வடிவேலு - சிங்கமுத்து பிரச்சினை கடும் மோதலாக உருவெடுத்துள்ளது.

நில மோசடி தொடர்பாக இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இதுகுறித்து இருவரும் ஒருவர் மீது ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த நிலையில், 'நாங்க புதுசா' என்ற நகைச்சுவை படம் எடுத்து வரும் தயாரிப்பாளர் கண்ணன் என்பவர், நடிகர் வடிவேலு மீது சென்னை போலீஸ் கமிஷனரிடம் நேற்று ஒரு புகார் மனு கொடுத்தார். "நான் எடுக்கும் சினிமாவில், நடிகர் சிங்கமுத்துவும் நடித்து வருகிறார். அவரை வைத்து படம் எடுப்பதால் வடிவேலு ஆட்களை வைத்து மிரட்டுகிறார்" அந்த புகாரில் கூறியிருந்தார்.

இந்த விவகாரம் குறித்து வடிவேலு, ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், "

சாலிகிராமத்தில் உள்ள எனது அலுவலகத்துக்கு எதிரில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறாராம். அவர் யார் என்றே எனக்கு தெரியாது. நான் அவரை பார்த்ததே இல்லை. அவர் சிங்கமுத்துவுக்கு நண்பராம்.

கடந்த 7-ந் தேதி கண்ணன் வீட்டுக்கு சிங்கமுத்து வருவதாக கூறி இருக்கிறார். அவரை வரவேற்பதற்கு வாசலில் 50 பேரை நிறுத்தி, 10 ஆயிரம் சரவெடி வெடித்து இருக்கிறார்கள். சிங்கமுத்து வாழ்க என்று கோஷம் போட்டு ரகளை செய்தார்களாம்.

அப்போது, நான் ஒரு ஓட்டலில் உட்கார்ந்து கதை கேட்டுக்கொண்டிருந்தேன். என் அலுவலகத்தில் இருந்து போன் வந்தது. ஆட்களை வைத்து, பட்டாசு வெடித்து சிங்கமுத்து ரகளை செய்து கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். உடனே நான் போலீசில் புகார் செய்யும்படி என் உதவியாளர்களிடம் கூறினேன். அவர்களும் போலீசில் புகார் கொடுக்க, போலீசாரும் வந்து விசாரணை நடத்தி, என் அலுவலகத்துக்கு பாதுகாவலாக நின்றார்கள்.

அதன் பிறகு, சனிக்கிழமை அதே இடத்தில் சிங்கமுத்து காரில் உட்கார்ந்திருக்க, கண்ணன் என் அலுவலகத்துக்குள் கையில் ஆயுதத்துடன் நுழைந்து, "ஏண்டா போலீசில் புகார் செஞ்சீங்க...?'' என்று என் அலுவலகத்தில் இருந்தவர்களை மிரட்டியுள்ளார். இதைத்தொடர்ந்து அவருக்கும், என் உதவியாளர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு, கைகலப்பு நடந்துள்ளது.

நடந்தது இதுதான். ஆனால் கண்ணன் என்பவர், நான்தான் ஆள் வைத்து மிரட்டியதாக பொய் புகார் கொடுத்துள்ளார்.

இதற்கெல்லாம் காரணம் சிங்கமுத்துதான். அவர் மீது நான் தொடர்ந்துள்ள வழக்குகளை வாபஸ் பெறும்படி பல விதங்களில் முயன்று வருகிறார். அதில் ஒன்றுதான் இப்போது தரப்பட்டுள்ள போலீஸ் புகார்" என்றார்.

Comments

Most Recent