ஜூன் மாதத்திலிருந்து நடிக்கிறேன் என்று நான் சொன்னதைத் திரித்து எழுதி என் வாழ்க்கையோடு விளையாடப் பார்க்கிறார்கள் சிலர். நான் நடிப்புக்கு ...
ஜூன் மாதத்திலிருந்து நடிக்கிறேன் என்று நான் சொன்னதைத் திரித்து எழுதி என் வாழ்க்கையோடு விளையாடப் பார்க்கிறார்கள் சிலர். நான் நடிப்புக்கு முழுக்குப் போடுவதாக இல்லை. விரைவில் புதுப்பட அறிவிப்பை வெளியிடுவேன் என்றார் நடிகை பூஜா.
ஜேஜே படத்தில் அறிமுகமாகி, நான் கடவுள் படத்தில் நடித்து பெரும் புகழ் பெற்றவர் நடிகை பூஜா.
இப்போது புதிய படங்களில் நடிக்காமல் உள்ளார். விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும், அதனால்தான் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறேன் என்றும் பூஜா கூறியதாக மீடியாவில் செய்தி வெளியானது.
ஆனால் இப்போது அந்தச் செய்தியை முழுமையாக மறுத்துள்ளார் பூஜா.
இதுகுறித்து அவர் இன்று கூறுகையில், "நான் தொடர்ந்து சினிமாவில் நடிக்கப் போகிறேன். நான் கடவுள் படத்துக்குப் பிறகு நல்ல படங்கள், நல்ல கேரக்டர்களில் நடித்தால் போதும் என்று முடிவு செய்துவிட்டேன். 15க்கும் மேற்பட்ட பட வாய்ப்புகளை மறுத்துவிட்டேன்.
என் பெற்றோருக்கு வயதாகிவிட்டது. எனக்கொரு பாட்டி இருக்கிறார். அவருக்கு 90 வயது. நான்தான் இவர்களை அருகிலிருந்து பார்த்துக் கொள்ள வேண்டும். அதனால்தான் நடிப்புக்கு தற்காலிக ஓய்வு தந்துவிட்டு, பெற்றோரைக் கவனித்துக் கொள்கிறேன். என் தந்தை எனக்குத் திருமணம் செய்து வைக்க விரும்பினார். பெற்றோரின் ஆசை அது. அதற்கு மதிப்பளித்து ஒப்புக் கொண்டேன். ஆனால் ஜூன் மாதம் வரை மாப்பிள்ளை பார்க்க அவர்களுக்கு டைம் கொடுத்திருக்கிறேன்.
ஜூனுக்குப் பிறகு நடிப்பைத் தொடரப் போகிறேன். விரைவில் புதிய படத்தில் நடிப்பது குறித்த அறிவிப்பை வெளியிடவிருக்கிறேன்.
என்னிடம் முழுமையாகக் கூட விசாரிக்காமல், நான் சினிமாவுக்கு முழுக்குப் போட்டுவிட்டதாக சில பத்திரிகைகளில் செய்தி வந்ததில் உண்மையில்லை. இப்படியெல்லாம் எனது வாழ்க்கையோடு விளையாடக் கூடாது" என்றார்.
Comments
Post a Comment