Captain TV is different: Sutheesh

http://thatstamil.oneindia.in/img/2010/04/11-captain-tv-200.jpg
சென்னை: மற்ற டிவிகளிலிருந்து வித்தியாசமானதாக இருக்கும் கேப்டன் டிவி. அங்கு இல்லாதது இங்கு இருக்கும் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்தின் மைத்துனரும், தேமுதிக இளைஞர் அணிச் செயலாளரும், கேப்டன் டிவி நிர்வாக இயக்குநருமான எல்.கே.சுதீஷ் கூறியுள்ளார்.

இன்று முதல் கேப்டன் டிவி தனது சோதனை ஒளிபரப்பை முறைப்படி தொடங்கியது. ஏப்ரல் 14ம் தேதி முதல் தனது ஒளிபரப்பை அது அதிகாரப்பூர்வமாக தொடங்கவுள்ளது.

இதுகுறித்து சுதீஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

கேப்டன் டிவி வரும் 14ம் தேதி சித்திரைத் திருநாளன்று ஒளிபரப்பப்படுகிறது. இதற்கான சோதனை ஓட்டம் இன்று தொடங்கியது.

கேப்டன் டிவியில் மற்ற டிவிகளில் இல்லாதது இடம் பெறும். மக்களை, குறிப்பாக இளைஞர்களை நல்வழிப்படுத்தும் நிகழ்ச்சிகள் அதிக அளவில் இடம் பெறும்.

சுய தொழில், பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரப்படும்.

மெகா சீரியல்கள் இடம் பெறும. ஆனால் அனைத்தும் சமுதாயத்தை நல்வழிப்படுத்தும் வகையிலான கருத்துக்களையே கொண்டிருக்கும். தினசரி பிற்பகலில் திரைப்படம் ஒளிபரப்பப்படும்.

மக்களின் எதிர்பார்ப்பை மனதில் வைத்துக்கொண்டு அவர்களை தேவையான விஷயங்களை கொண்டு செல்வதில் கேப்டன் டிவி முன்னிலை வகிக்கும்.

செய்திகள் மே 1ம் தேதி முதல் ஒளிபரப்பாகும். தினசரி காலை 7.30, பிற்பகல் 1 மணி, இரவு 7.30 மற்றும் இரவு 10மணி என 4 முறை செய்திகள் ஒளிபரப்பாகும் என்றார் சுதீஷ்.

ஏப்ரல் 14ம் தேதி நடைபெறும் டிவி தொடக்க விழாவில் பல்வேறு பிரபலங்கள் வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments

Most Recent