எல்லாமும் முடிந்து சினிமாவுக்கு தயாரான போது அப்பாவே "மம்பட்டியான்',"பொன்னர் சங்கர்' என காத்திருந்தார். இதோ "மம்பட்டி...
எல்லாமும் முடிந்து சினிமாவுக்கு தயாரான போது அப்பாவே "மம்பட்டியான்',"பொன்னர் சங்கர்' என காத்திருந்தார். இதோ "மம்பட்டியான்' ரெடியாகி விட்டது. அடுத்த ரவுண்ட் நிச்சயம் பெரிய மாற்றத்தைத் தரும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்கிறார் பிரசாந்த்.
27 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த "மலையூர் மம்பட்டியான்' படம், தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த் ஹீரோவாக நடிக்க "மம்பட்டியான்' என மாற்றம் பெறுகிறது.
"மம்பட்டியான்', "பொன்னர் சங்கர்' என அடுத்த ரவுண்டுக்கு அப்பாவுடன் இறங்கி விட்டீர்களா?
அழகாக சில விஷயங்களையும், அழகில்லாமல் சில விஷயங்களையும் வாழ்க்கை தந்து கொண்டே இருக்கிறது. அதற்காக இந்த வாழ்க்கையை விட்டு விட்டு எங்கும் போய் விட முடியாது. இந்த வாழ்க்கையும் எங்கும் சென்று விடாது. எல்லாப் பிரச்னைகளும் முடிந்து சினிமாவுக்குத் தயாரான போது "மம்பட்டியான்', "பொன்னர் சங்கர்' என திட்டங்களை கையில் வைத்து காத்திருந்தார் அப்பா. சின்ன வயதில் இருந்தே என்னுடன் இருந்திருக்கிறார். இப்போதும் இருக்கிறார். சந்தோஷமான தருணங்களையும், துக்கமான துளிகளையும் அவருடன் பகிர்ந்து வந்திருக்கிறேன். எனக்கு என்ன தேவை என்பது அவருக்கு தெரியும். அதனால் அவருடனேயே அடுத்த ரவுண்டுக்கு தயாராகி விட்டேன். "மம்பட்டியான்', "பொன்னர் சங்கர்' என வாழ்க்கை மாற்றங்களைத் தர காத்திருக்கிறது.
இவ்வளவு நாள் நடிப்புக்கு
இடைவெளி விட்டிருந்தது சரியா?
சினிமா நான் விரும்பி ஏற்றுக் கொண்ட ஒன்று. 17 வயதில் இருந்து இன்று வரை சினிமாவை தவிர வேறு எதுவும் தெரியாது. அழகான வாழ்க்கையில் சில சந்தோஷமான தருணங்களையும் இழந்து வந்திருக்கிறேன். அதில் சினிமா தருணங்கள் முக்கியமானது. எல்லா பிரச்னைகளும் இப்போது முடிந்து விட்டது. மனமும், உடலும் சினிமாவை நோக்கி திரும்பி விட்டது. அதற்கான களங்களை தேர்ந்தெடுத்து வருகிறேன். நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். எல்லா இரவுகளும் விடியும்.
மீரா ஜாஸ்மின், பிரகாஷ்ராஜ், வடிவேலு என செலக்டிவான ஆள்கள் மம்பட்டியானில்
இருக்கிறார்களே?
பழைய "மலையூர் மம்பட்டியானை' பார்க்காதவர்களே இருந்திருக்க மாட்டார்கள். இப்போதும் சிலர் அப்பாவை மம்பட்டியான் என்றுதான் அழைக்கிறார்கள். அந்த அளவுக்கு அப்பாவுக்கு அந்த கேரக்டர் பொருத்தமானதாக இருந்தது. சரிதா, கவுண்டமணி என எல்லோரும் செலக்டிவான ஆள்கள்தான். 27 ஆண்டுகளுக்கு முன் எல்லோரும் ரசித்து பார்த்த அந்தக் கதையை காலத்துக்கு ஏற்ற மாற்றங்களோடு தரப் போகிறோம் என்ற திருப்தி இருக்கிறது. இந்த படத்துக்கு மீரா ஜாஸ்மின், வடிவேலு, பிரகாஷ்ராஜ் என எல்லோரும் தங்களது பங்களிப்பை கொடுத்திருக்கிறார்கள். அடர்ந்த காடுகள், கரடு முரடான பாதைகள் என கஷ்டப்பட்டிருக்கோம். நிச்சயம் மாற்றம் இருக்கும்.
வேறு யார் கதை சொல்லியிருக்கிறார்கள்?
முன்னணி இயக்குநர்கள் சிலர் கதை சொல்லியிருக்கிறார்கள். இந்த இரண்டு படங்களையும் முடித்த பின்னர்தான் அடுத்த படம் என முடிவெடுத்து விட்டேன். தற்போது பணியில் இருக்கும் இரண்டு படங்களுக்கும் பெரிய அளவில் பங்களிப்பு தேவைப்படுகிறது. அதற்கான பணிகளில் ஆர்வம் காட்டி வருகிறேன். சில கதைகள் தேர்விலும் இருக்கிறது. முதலில் எடுத்த வேலைகளை முடிப்போம் என்றிருக்கிறேன். இனி வரும் படங்கள் வித்தியாசமானதாக இருக்க வேண்டும்.
இதுவரை வாழ்க்கை சொல்லி தந்தது....
எல்லாமும் விலகிச் சென்றாலும், வாழ்வதற்கு இந்த வாழ்க்கை ஏதோ ஒரு இடத்தில் காத்திருக்கிறது. அந்த வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து விட வேண்டும். என்னை நேசிக்காத சில நிமிடங்களுக்காக நான் வருத்தப்பட முடியாது. இனி வரப் போகிற நிமிடங்களை நேசிக்காமலும் விட முடியாது. இந்த வாழ்க்கையின் நிமிடங்கள் ஒவ்வொன்றையும் இப்படியே கை தட்டி ரசிக்க வேண்டும்.
Comments
Post a Comment