மதுரையில் உள்ள நடிகர் வடிவேல் வீட்டுக்குள் அடையாளம் தெரியாத ஒரு பெண் உள்பட 4 பேர் திடீரென்று நுழைய முயன்றனர். இதனால் பீதியடைந்த வடிவேலு ...
மதுரையில் உள்ள நடிகர் வடிவேல் வீட்டுக்குள் அடையாளம் தெரியாத ஒரு பெண் உள்பட 4 பேர் திடீரென்று நுழைய முயன்றனர். இதனால் பீதியடைந்த வடிவேலு குடும்பத்தினர் போலீஸில் புகார் செய்துள்ளனர். விசாரணை தொடர்கிறது.
நடிகர் வடிவேலுவுக்கு மதுரையை அடுத்த விரகனூர் காரியாநல்லூரில் ஒரு அடுக்குமாடி வீடு உள்ளது. இந்த வீட்டின் கீழ் பகுதியில் அவரது தாயார், தம்பி, தங்கை ஆகியோர் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். மேல் பகுதி வாடகைக்கு விடப்பட்டுள்ளது. அடிக்கடி வடிவேலு இந்த வீட்டுக்கு வந்து சில தினங்கள் குடும்பத்துடன் செலவிடுவார்.
நடிகர் வடிவேலுவுக்கும், நடிகர் சிங்கமுத்துவுக்கும் இடையே நிலம் வாங்கியது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது. புறம்போக்கு நிலத்தை ஏமாற்றி தன்னிடம் விற்றுவிட்டதாக சிங்கமுத்து மீது வடிவேல் புகார் கூறியிருக்கிறார். மேலும் சிங்கமுத்து தன்னை கொல்ல முயல்வதாகவும் புகார் கூறியுள்ளார். சிங்கமுத்து மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தமிழக திரையில் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் நேற்று பிற்பகல் 12.45 மணி அளவில் காரியாநல்லூர் வடிவேலுவின் வீட்டுக்கு ஒரு மர்ம கார் வந்தது. அந்த காரில் ஒரு பெண் உள்பட 4 பேர் இருந்தனர்.
அவர்கள் வாசலில் காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கியதும், அங்கிருந்த வடிவேலின் தாயார், மற்றும் மைத்துனர் (தங்கையின் கணவர்) முருகேசன் ஆகியோரிடம் வடிவேல் பற்றி விசாரித்துள்ளனர். மேலும் அவர்கள் வடிவேல் இங்கு வந்தால் எந்த அறையில் தங்குவார்? அவரது போட்டோ உள்ளதா? என்று கேட்டனர். அதற்கு வீட்டில் உள்ளோர் இதெல்லாம் ஏன் கேட்கிறீர்கள் என்றனர். உடனே அவர்கள் அந்த போட்டோவுடன் நாங்கள் நின்று படம் எடுக்கவேண்டும் என்றனர்.
அடுத்த நொடியில் அந்த மர்ம நபர்கள் வடிவேலின் வீட்டுக்குள் நுழைய முயன்றனர். அப்போது அவர்களை உறவினர்கள் தடுத்து நிறுத்தி வெளியே போங்கள் என்று கத்தினர். உடனே அவர்கள் தாங்கள் வந்த காரில் ஏறிச் சென்றுவிட்டனர்.
இந்த சம்பவம் பற்றி வடிவேலுவின் தங்கை கணவர் முருகேசன் சிலைமான் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வடிவேல் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். பக்கத்து வீட்டுக்காரர்களிடமும் அங்கு காரில் வந்த மர்ம நபர்கள் பற்றி விசாரித்தனர்.
Comments
Post a Comment