சென்னை: குறைந்து விலைக்கு நிலம் தருகிறோம் என்று கூறி தமிழகத்திலும், கர்நாடகத்திலும் ஆயிரக்கணக்கான மக்களிடம் கோடிக்கணக்கில் பணத்தை மோசடி செய்...
சென்னை: குறைந்து விலைக்கு நிலம் தருகிறோம் என்று கூறி தமிழகத்திலும், கர்நாடகத்திலும் ஆயிரக்கணக்கான மக்களிடம் கோடிக்கணக்கில் பணத்தை மோசடி செய்த ஜேபிஜே நிறுவனத்திடம் பெரும் பணத்தை இழந்து ஏமாந்து நிற்கும் பொதுமக்கள் நடிகர், நடிகையர்கள் இந்த மோசடி நிறுவனத்துக்காக நடித்துக் கொடுத்த விளம்பரங்களைப் பார்த்துதான் ஏமாந்து போய் விட்டோம் என்று புலம்பியுள்ளனர்.
நிலம் வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட ஜேபிஜே நிறுவனத்திற்கு தமிழ்நாட்டில் 58 கிளைகள் உள்ளன. 40 மண்டல அலுவலகங்கள் செயல்படுகின்றன.
இதன் உரிமையாளர் ஜஸ்டின் தேவதாஸ். இந்த மோசடிப் பேர்வழி, ஒரு ஆண்டுக்கு முன் வள்ளுவர் கோட்டத்தில் பிரமாண்ட கூட்டம் நடத்தினார். இதில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கவர்ச்சிகர திட்டங்கள் அறிவித்தார்.
அதன்படி ஜேபிஜேவில் ஒரு லட்சம் பணம் கட்டினால் 6 மாதத்தில் நிலத்தை பதிவு செய்து ஒரு வருடத்தில் ரூ.2 லட்சம் பணம் திரும்ப கிடைக்கும் என்பது உள்ளிட்ட பல்வேறு புரூடா அறிவிப்புகளையும், டுபாக்கூர் திட்டங்களையும் அறிவித்தார்.
இந்த மோசடி நிறுவனத்திற்காக 120 மேனேஜர்கள், 40 மண்டல அலுவலர்கள் பணிபுரிந்தனர்.
சமீபத்தில்தான் கர்நாடகவில் செய்த மோசடி தொடர்பாக ஜஸ்டின் தேவதாஸை கர்நாடக போலீஸார் கைது செய்தனர்.
இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், உள்பட கன்னியாகுமரி வரை ஏராளமானோர் இங்கு பணம் கட்டி ஏமாந்த அப்பாவி மக்கள் தங்கள் பகுதி போலீஸ் நிலையங்களில் புகார் செய்துள்ளனர்.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் புகார் செய்தனர்.
ஜேபிஜேவின் மோசடித் திட்டத்தால் ஏமாந்த ஒருவர் கூறுகையில்,
மாதவரம் அருகே லிட்டில் சிங்கப்பூர் வீட்டு மனை திட்டத்தை ஜே.பி.ஜே. நிறுவனம் அறிவித்தது. நான் ரூ.10 லட்சம் செலுத்தினேன். 6 மாதத்தில் பத்திரப்பதிவு என்றும், 1 வருடத்தில் செலுத்திய ரூ.10 லட்சம் திரும்ப கிடைக்கும் என்றும் சொன்னார்கள்.
6 மாதம் கழித்து போனேன். அலுவலகத்தில் இருந்தவர்கள் இதற்கு சரிவர பதில் தரவில்லை. திரும்ப திரும்ப சென்று கேட்டேன். எனக்கு யாரும் உத்தரவாதம் தரவில்லை. இதனால் போலீசில் புகார் செய்தேன் என்றார்.
ஒரு பெண் கூறுகையில்,
திருவாலங்காடு என்ற இடத்தில் 1500 சதுர அடி நிலம் என்று சொல்லி 1 லட்சத்து 20 ஆயிரம் செலுத்தினேன். பத்திரமும் பதிவு செய்து கொடுத்தார்கள்.
நேரில் போய் விசாரித்தபோது அந்த இடத்தில் நிலமே இல்லை. இந்த நிறுவனத்துக்காக டிவி விளம்பரங்களில் நடிகர் விஜயகுமார், நடிகை மீனா ஆகியோர் தோன்றி விளம்பரம் செய்தார்கள். இதை நம்பிதான் பணம் செலுத்தினேன். இப்படி ஏமாற்றுவார்கள் என்று நம்பவில்லை.
ஜே.பி.ஜே. உரிமையாளரை பெங்களூரில் கைது செய்து விட்டதாக சொன்னார்கள். அது உண்மையா? என்று தெரியவில்லை என்றார்.
காசு வாங்கிக் கொண்டு நடிப்பவர்கள்தான் நடிகர், நடிகையர். அவர்கள் சொல்வதை வேதவாக்காக கருதும் மூடத்தனத்தை மக்கள் எப்போதுதான் விடப் போகிறார்களோ..?
Comments
Post a Comment