எம்.எல்.ஏ பதவியிலிருந்து விலகக் கோரி ஜெயசுதாவை முற்றுகையிட்டு போராட்டம்



தெலுங்கானா போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உடனடியாக எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நடிகை ஜெயசுதாவை முற்றுகையிட்டு தெலுங்கானா போராட்டக் குழுவினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏவாக இருப்பவர் ஜெயசுதா. சமீபத்தில் அரசியல் ஒரு சாக்கடை என உணர்ந்து விட்டேன். இனியும் அரசியலில் நீடிக்க விரும்பவில்லை. விரைவில் விலகி விடுவேன் என்று கூறியிருந்தார் ஜெயசுதா.

இந்த நிலையில், ஜெயசுதா கரீம்நகர் மாவட்டம் ஜெகத்தியாலா பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதை அறிந்ததும் ஏராளமான தெலுங்கானா கட்சி தொண்டர்கள் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் ஜெயசுதாவை முற்றுகையிட்டு எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யும்படி கோரிக்கை விடுத்தனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டக் குழுவினரை அமைதிப்படுத்திய ஜெயசுதா அவர்களிடம் பேசுகையில், நான் தெலுங்கானாவுக்கு எதிரானவள் இல்லை. நான் தெலுங்கானாவை ஆதரிக்கிறேன். விரைவில் பதவியை ராஜினாமா செய்வேன் என்றார்.

இதைக் கேட்டு அமைதி அடைந்த கூட்டத்தினர் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.

Comments

Most Recent