ரஜினி வீட்டில் கோவா பாடல்கள் வெளியீடு!



கோவா படத்தின் பாடல்களை தன் வீட்டில் வைத்து சிம்பிளாக வெளியிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

ரஜினியின் மகள் செளந்தர்யா தயாரித்த இந்தப் படம் ரஜினி குடும்பத்துக்கு கசப்பான அனுபவமாக அமைந்துவிட்டது.

படத்துக்காக வாங்கிய கடனைத் திருப்பித் தருவது தொடர்பாக ஒரு பைனான்சியர் செளந்தர்யா மீது புகார் கூறிவிட ரஜினி கடும் அப்செட்.

இந் நிலையில் சத்யம் திரையரங்கில் இந்தப் பாடல் வெளியீட்டு விழா ரஜினி முன்னிலையில் நடக்கும் என்று கூறியிருந்தார்கள். ஆனால் அந்த விழாவை ரத்து செய்துவிட்டனர்.

இந் நிலையில் நேற்று இந்த பாடல் சிடிக்களை ரஜினி தனது வீட்டிலேயே வைத்து வெளியிட்டார்.

பாடல் வெளியீட்டு விழாவின்போது, படத்தின் சில காட்சிகள் ரஜினிக்கு திரையிட்டுக் காட்டப்பட்டன. நல்லாருக்கே... முழுப் படத்தையும் காட்டுங்க என்று வெங்கட் பிரபுவைப் பாராட்டி பணித்தாராம் ரஜினி. விரைவில் ஃபோர் பிரேம்ஸில் கோவா படம் பார்க்கிறார் ரஜினி.

இதற்கிடையே, கோவா படத்தின் வெளியீட்டு உரிமை குறித்து சன் பிக்சர்ஸுடன் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்களாம். இப்போதைக்கு சேட்டிலைட் உரிமையை மட்டும் வாங்கிவிட்டது சன்.

வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஜெய், சினேகா, பிரேம்ஜி அமரன் ஆகியோர் நடித்துள்ளனர். யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

Comments

Most Recent