திருட்டு வி.சி.டி.யும் தேச விரோத செயல்களும்: கமல்


சென்னை, ஜன. 5: திருட்டு வி.சி.டி. மூலம் கிடைக்கும் பணம் தீவிரவாதம் போன்ற தேச விரோத செயல்களுக்குத்தான் பயன்படுகிறது என்றார் நடிகர் கமல்ஹாசன்.
விஞ்ஞான வளர்ச்சியின் காரணத்தால் திருட்டு வி.சி.டி.யை முற்றிலும் ஒழிக்க முடியாது. படம் வெளியாகும்போதே சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனம், முறையான உரிமத்துடன் அந்தப் படத்தின் வி.சி.டி.க்களையும் விற்பனை செய்தால் ஓரளவுக்கு திருட்டு வி.சி.டி.யைத் தடுக்கலாம்.
சாராயக் கடைகள் தாராளமாகத் திறந்திருக்கும்போதே கள்ளச்சாராயச் சாவுகள் ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. குறைந்த விலையில் வி.சி.டி.க்கள் விற்றால் மக்கள் வாங்கத்தான் செய்வார்கள்.
இதை மக்களுக்கு எப்படி உணர்த்துவது? திருட்டு வி.சி.டி. மூலம் சம்பாதிப்பவர்கள், அந்தக் கருப்புப் பணத்தை என்ன செய்வார்கள்? கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள் கோயில் உண்டியலில் போடுவார்கள். அதையடுத்து..? தேச விரோத செயல்களுக்குத்தான் இதுபோன்ற கருப்புப் பணம் உதவுகிறது. நல்ல காரியத்துக்குப் போய்ச்சேருவதில்லை. உங்கள் தலையில் விழும் குண்டுகள் தயாரிக்கத்தான் இந்தப் பணம் உதவுகிறது என்று மக்களுக்கு உணர்த்த வேண்டும்.
"ஜக்குபாய்' திருட்டு வி.சி.டி. பிரச்னையில் இப்போது என்ன செய்யப்போகிறோம் என்பதுதான் முக்கியம். நம்முடைய வீட்டைப் பூட்ட மறந்துவிட்டு பொருள் தொலைந்துவிட்டது என புலம்பக் கூடாது. இந்தப் படத்தை எவ்வளவு சீக்கிரம் வெளியிட முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வெளியிட வேண்டும். அப்போதுதான் படம், பெரிய வெற்றிபெறும்.
திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க திரையுலகத்தினர் கூடி ஒரு நல்ல முடிவை எடுத்தால் அதற்குக் கட்டுப்படத் தயார் என்றார்.
சரத்குமார் பேசும்போது... முழுமை பெறாத "ஜக்குபாய்' படத்தின் திருட்டு வி.சி.டி. வெளிவந்துள்ளது. இதனால் ஏற்பட்ட நஷ்டத்தை நானும் ராதிகாவும் நடித்துச் சம்பாதித்து விடுவோம். ஆனால் இந்தப் படத்துக்குப் பின்னால் எத்தனை பேரின் உழைப்பு சுரண்டப்பட்டிருக்கிறது?
சிறு பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டால் அவர்களால் எப்படித் தாங்கிக்கொள்ள முடியும்? அதனால் இந்தப் பிரச்னைக்கு திரையுலகினர் ஒற்றுமையாக இருந்து ஒரு முடிவு கட்ட வேண்டும் என்றார்.
தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி. பேசுகையில்... சரத்குமார், ராதிகா போன்றோர் நடிப்புத்துறையில் இருப்பதால் அவர்கள் நடித்துச் சம்பாதித்துக்கொள்ள முடியும். என்னைப் போன்ற தயாரிப்பாளர்களின் படங்கள் இவ்வாறு வெளிவந்தால் நாங்கள் எப்படி நஷ்டத்தை ஈடுகட்ட முடியும்?
பிரச்னை என வந்தவுடன் தாற்காலிகமாகக் கூடிப் பேசி கலைந்துவிடக் கூடாது. நன்கு யோசித்து, இதற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ராம.நாராயணன், வி.சி.குகநாதன், நடிகை ராதிகா, இயக்குநர்கள் சேரன், ஏ.ஆர்.முருகதாஸ், கே.எஸ்.ரவிகுமார், தயாரிப்பாளர்கள் ஆர்.பி.செüத்ரி, ஆர்.கே.செல்வமணி, சிவசக்திபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Comments

Most Recent