"கலைஞர்கள் உணர்ச்சிவசப்பட்டு பேசி இருக்கிற நிலையை மோசமாக்கக் கூடாது. அறிவோடு பேசணும். கலைக்கு பகையும் இல்லை, எல்லையும் இல்லை. பாதுகாப்ப...
"கலைஞர்கள் உணர்ச்சிவசப்பட்டு பேசி இருக்கிற நிலையை மோசமாக்கக் கூடாது. அறிவோடு பேசணும். கலைக்கு பகையும் இல்லை, எல்லையும் இல்லை. பாதுகாப்பான இடத்தில் கலை நன்றாக இருக்கும்!" என்று கூறியுள்ளார்.
தெலுங்கானா பிரச்சினை காரணமாக ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடத்த முடியாத சூழல் இருப்பதால், படப்பிடிப்பு நிறுவனங்களை சென்னைக்கு மாற்றும் முடிவுக்கு வந்துள்ளனர் தெலுங்கு திரையுலகினர்.
அப்படி அவர்கள் வந்தால் அவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்து தருவதில் நமக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என தமிழ் திரையுலகம் வரவேற்றுள்ளது.
இந்த நிலையில் குறுக்கு சால் ஓட்டுவது போல, சிரஞ்சீவியையும், சென்னைக்கு வரவிருக்கும் தயாரிப்பாளர்களையும் நன்றி கெட்டவர்கள் என திட்டியுள்ளார் விஜய்சாந்தி.
சென்னை இன்னொரு மாநிலத் தலைநகர் என்பதை மறந்து, அங்கு போவதா என்றும், தெலுங்கு சினிமாக்காரர்களுக்கு சென்னை மோகம் இன்னும் போகவில்லையை என்றும் அவர் கேட்டுள்ளார்.
இதுகுறித்து பேட்டியளித்த சிரஞ்சீவி, "தெலுங்கானா பிரச்சினை இன்னும் மோசமாக போய்க் கொண்டுள்ளது. இந்தப் பிரச்சினையை தேவையின்றி சினிமாவிலும் திணிக்கிறார்கள். படப்பிடிப்பு நடக்க விடவில்லை. பல படங்கள் பாதிக்கப்பட்டு, பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இனியும் இந்த நிலை தொடர வேண்டாம் என்பதற்காகவே சென்னைக்குப் போகலாம் என முடிவு செய்துள்ளனர் தயாரிப்பாளர்கள். இதில் என்ன தவறு இருக்கிறது?
சென்னையில் தெலுங்கு மக்களுடைய ஸ்டுடியோக்கள் இல்லையா? அல்லது சென்னையில் இதற்கு முன் தெலுங்குப் படங்கள் தயாரானதில்லையா?
எதையும் அறிவோடு பேசணும்... கலைக்கும் கலைஞர்களுக்கும் எல்லைகளும் இல்லை, பகையும் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பாதுகாப்பான ஊரில்தான் கலை நன்றாக இருக்கும்!" என்றார்.
Comments
Post a Comment