'குட்டி' தனுஷ் பேட்டியும்.. தயாரிப்பாளரின் கடுப்பும்!



பொங்கல் ரேஸில் குட்டி படம் ஜெயித்துவிட்டதாக தயாரிப்பாளர் -விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளதே...?

"எங்க அண்ணன் செல்வராகவன்தான் எப்போதும் ஜெயிப்பார். என்னை உருவாக்கியதே அவர்தான். அவருக்கு முன் நான் ஒன்றுமே இல்லை. குட்டி, ஆயிரத்தில் ஒருவன் இரண்டுமே வெவ்வேறு வகைப் படங்கள். இரண்டையும் ஒப்பிட வேண்டாம். இந்த முறையும் எங்க அண்ணன்தான் ஜெயிச்சிருக்கார்...!"

- நேற்று நடந்த குட்டி பிரஸ் மீட்டில், பத்திரிகையாளர்களின் கேள்விக்கு தனுஷ் சொன்ன பதில்.

விளைவு, செம கடுப்பாகி விட்டது ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம்.

மிகுந்த நெருக்கடிக்கிடையே இந்த நிறுவனம் தயாரித்த படம் குட்டி. தெலுங்கு ஹிட் 'ஆர்யா'வின் ரீமேக். கடைசி நிமிடம் வரை இந்தப் படம் வருமா வராதா என்ற சந்தேகம் இருந்தது. காரணம் படத்தின் நாயகனான தனுஷ்தான்.

அவரது அண்ணன் செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் ரிலீஸாவதால் இந்தப் படத்தை அதற்கு போட்டியாக இப்போது வெளியிடக் கூடாது என்பதில் குறியாக இருந்தார் தனுஷ்.

இதனாலேயே, அந்த நிறுவனம் நடத்திய பிரஸ் மீட்டுகளில் கூட தனுஷ் கலந்து கொள்ளவில்லை. தயாரிப்பாளர்களின் நெருக்குதலுக்கு கடைசி நேரத்தில் பணிந்து ஒரே ஒரு முறை ஸ்ரேயாவுடன் குறிப்பிட்ட சில சேனல்களுக்கு மட்டும் பேட்டி கொடுத்து 'எஸ்'ஸானார்.

செல்வராகவனுடன் கூடப் பிறந்த அவருக்கு அப்படியொரு உணர்வு இருப்பது நியாயம்தான். ஆனால் கடன் உடன் வாங்கி படமெடுத்த தயாரிப்பாளருக்கு என்ன இருக்கிறது அப்படி நினைக்க?

எனவே, தனுஷ் எதிர்ப்பையும் மீறி அந்தப் படத்தை வெளியிட்டுள்ளனர். பரவாயில்லை எனும் அளவு இந்தப் படம் ஓட, ஆயிரத்தில் ஒருவன் அல்லாடுகிறது.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் நகரில் ஒரு திரையரங்கில் இந்தப் படம் வெளியான இரண்டாம் நாள் வந்த ரசிகர்கள் எண்ணிக்கை 100-க்கும் குறைவு. சைக்கிளுக்கு டோக்கன் கொடுத்த பையன் செய்த அர்ச்சனை கொஞ்ச நஞ்சமல்ல!

கிருஷ்ணகிரியில் நிலைமை கொஞ்சம் பெட்டர்... மூன்றாம் நாள் ஷோவுக்கு 200 பேர் தேறினார்களாம்!!

இந்த லட்சணத்தில், 'எங்க அண்ணன் படம்தான் ஜெயிச்சது, என் படம் இல்ல' என்று தனுஷ் கொடுத்த பேட்டி தயாரிப்பாளர்களைக் கடுப்பேற்றி உள்ளது. இதுபற்றி விரைவில் உரியவர்களிடம் புகார் தரவும் அவர்கள் தயாராவதாகக் கூறப்படுகிறது.

Comments

Most Recent