'டைம்லைன்' தழுவலா ஆயிரத்தில் ஒருவன்?



ஆயிரத்தில் ஒருவன் படம் குறித்த சர்ச்சைகள் தொடர்கின்றன.

இந்தப் படம் சொந்தமாக தனது மூளையில் உதித்த கதை என்றும், யாரையும் பார்த்து காப்பியடிக்க வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்றும், அப்படி ஒரு வேளை காப்பியடித்தது நிரூபிக்கப்பட்டால் தான் வைத்திருக்கும் எஞ்ஜினியரிங் டிகிரி சான்றிதழை எடுத்துக் கொண்டு வேறு வேலைக்குப் போய்விடுவேன் என்றும் மகா ஆத்திரத்தோடு இயக்குநர் செல்வராகவன் நேற்று கூறியிருந்தார்.

'தனது டிகிரி சான்றிதழை முடிந்தால் அவர் தேடி எடுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது', என்று கிண்டலாக சிரிக்கிறார்கள் செய்தியாளர்கள்.

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் கதை ஏற்கெனவே 2003ம் ஆண்டு வெளியான டைம்லைன் (Timeline) என்ற படத்தின் தழுவல் என்றும் ஆதாரத்தோடு செய்திகள் வெளியாகியுள்ளன.

"செல்வராகவனுக்குப் பிடித்திருக்கிறது என்பதற்காக எல்லோரும் அந்தப் படத்தைக் கொண்டாட வேண்டிய அவசியமில்லை. கலை என்று வந்தபிறகு தமிழென்ன, ஆங்கிலமென்ன... நன்றாக இருந்தால் ரசிக்கப் போகிறார்கள்... இல்லாவிட்டால் தூக்கி எறிந்து விட்டுப் போய்க் கொண்டே இருப்பார்கள், அது ரஜினி - கமல் படங்களாக இருந்தாலும்" என்கிறார்கள் விமர்சகர்கள்.

"அதுமட்டுமல்ல, இந்தப் படத்தின் தலைப்பே ஒரிஜினல் கிடையாது. கிளாடியேட்டர் போன்ற பெரும் சாதனைப் படைத்த படங்களின் காட்சியமைப்புகளை அப்பட்டமாக எடுத்தாண்டுள்ளார் செல்வராகவன். குறிப்பாக படத்தின் மையக் கரு, டைம்லைன் படத்தினை அப்பட்டமாக தழுவியதே. இதைச் சொன்னால் செல்வராகவனுக்கு ஏன் கோபம் வருகிறது...?" என்றும் கேள்வி எழுப்புகின்றனர், நேற்று அவரது பிரஸ் மீட்டில் கலந்து கொண்டவர்கள்.

ஒரு பெண் சிறுநீர் கழிப்பதை அப்படியே படமாக்குவதுதான் கலை ரசனையா? என்பது இவர்கள் கேள்வி.

சரி... டைம்லைன் படத்தின் கதை என்ன?

ஜூராஸிக் பார்க் படத்தின் கதை எழுதிய மைக்கேல் கிரிக்டன் உருவாக்கிய கதைதான் டைம்லைன்.

பிரெஞ்சுக்காரர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் நடந்த சண்டையின்போது, பலமான ஆங்கிலேயர்களை பிரெஞ்சுப் படை தோற்கடிக்கிறது.

14-ம் நூற்றாண்டில் 'நூறாண்டுப் போர்கள்' நடந்த காலத்தில் இந்த சம்பவம் நடக்கிறது. அப்போது ஒரு பிரெஞ்சு கிராமமே முற்றாக எரிக்கப்படுகிறது.


அந்த கிராமத்துக்கு அகழ்வாராய்ச்சி செய்ய போகிறது ஒரு குழு. அப்போது அவர்கள் 14-ம் நூற்றாண்டு காலகட்டத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். அப்போது மீண்டும் பிரான்சுக்கும் பிரிட்டனுக்கும் போர் மூளுகிறது.. என்று போகிறது அந்தக் கதை.

80 மில்லியன் டாலர் செலவில் 2003-ம் ஆண்டு எடுக்கப்பட்டு, படுதோல்வியைத் தழுவிய படம் இது. ஆயிரத்தில் ஒருவன் படத்தின் மூலக் கதை கிட்டத்தட்ட டைம்லைன் படத்தை ஒத்ததே என்கிறார்கள்.

இதைவிட கொடுமை, செல்வராகவனின் இந்தப் படத்தை ஈழத்து நிகழ்வுகளோடு ஒப்புமைப்படுத்தி சிலர் அபத்தமாக உளறிக் கொட்டுவதுதான், என்கிறார்கள் காட்டமாக.

20 நிமிட காட்சிகள் குறைப்பு!

இதற்கிடையே படம் புரியவில்லை, அருவருக்கத்தகையில் உள்ளது என்ற ரசிகர்களின் புகார், ரசிகர்கள் வருகை அடியோடு குறைந்துவிட்டதாக விநியோகஸ்தர்களின் நெருக்குதல் காரணமாக இந்தப் படத்தின் 2 பாடல்கள் உள்ளிட்ட 20 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.

இந்தத் தகவலை படத்தின் தயாரிப்பாளர் ரவீந்திரனே கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Most Recent