"கர்ண மோட்சம்' தமிழ் குறும்படத்துக்கு தேசிய விருது


புது தில்லி, ஜன. 23: கலை மற்றும் பண்பாட்டை சிறந்த முறையில் வெளிப்படுத்தும் சிறந்த குறும்படங்களுக்கான பிரிவில் முரளிமனோகர் இயக்கிய "கர்ண மோட்சம்' தமிழ் குறும்படம் தேசிய திரைப்பட விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

"குப்பச்சிகாலு' கன்னடப் படத்துக்கு சிறந்த குழந்தைகள் படத்துக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. "பயாஸ்கோப்' மலையாளப் படம் நடுவர் விருதைப் பெற்றுள்ளது.

யாஷ்ராஜ் தயாரித்த "ரோட் சைடு ரோமியோ' சிறந்த அனிமேஷன் படத்துக்கான விருதையும் "மும்பை மேரி ஜான்' படம் "ஸ்பெஷல் எபெக்ட்ஸ்' பிரிவில் சிறந்த படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

"எ வெட்னஸ்டே' ஹிந்திப் படத்தை இயக்கிய நீரஜ் பாண்டே இந்திரா காந்தி விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். குஜராத் கலவரத்தை மையமாக வைத்து நடிகை நந்திதா தாஸ் இயக்கிய "பிராக்' படம் சிறந்த படத்தொகுப்பு, சிறந்த கலை இயக்கம் ஆகிய விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுப்புறச் சூழலை காக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் படத்துக்கான விருதை "ஜியான்டா தூத்தா' ஒரிய மொழிப் படம் பெறுகிறது.

சோனி டர்போர்வாலாவின் "லிட்டில் ஸிஸவ்' ஹிந்திப் படம், குடும்ப நன்மதிப்பை வெளிப்படுத்தும் சிறந்த படத்துக்கான விருதைப் பெறுகிறது.

தேசிய விருதுப் பட்டியலில் வழக்கமாக மலையாளப் படங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இந்த முறை மராட்டியம், ஹிந்தி மொழிப் படங்களின் எண்ணிக்கையே அதிகம்.

புதுதில்லியில் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள விழாவில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் தேசிய விருதுகளை வழங்குகிறார்.

Comments

Most Recent