சென்ற ஆண்டில் 100-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியவர்களில் கபிலன் முக்கியமானவர். இப்போது விஜய்யின் 50}வது படமான ...
சென்ற ஆண்டில் 100-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியவர்களில் கபிலன் முக்கியமானவர். இப்போது விஜய்யின் 50}வது படமான "சுறா' உள்ளிட்ட படங்களில் பிஸியாக இருக்கிறார்.தினமணிக்கு அவர் அளித்த பேட்டி:இலக்கியத் தரம் குறைந்து உள்ளதே... இலக்கியத்தனத்தோடு நிறைய பாடல்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. பாபாநாசம் சிவன் தொடங்கி வைத்தது முதல் இன்று வரை நல்ல பாடல்களை தருவதற்காகத்தான் முயற்சிக்கிறார்கள். அதில் எனக்கும் பங்கு இருப்பதாக உணர்கிறேன். கதையும், சூழ்நிலையும்தான் ஒரு பாடலின் தன்மை எதுவாக இருக்க வேண்டும் என தீர்மானிக்கிறது. ""இலக்கியத் தரம் குறைந்து விட்டது. இலக்கியத்தனத்தோடு எழுத யாரும் இல்லை'' என்பதெல்லாம் இங்கில்லை. சூழ்நிலைகள் மட்டுமே நல்ல பாடல்களை உருவாக்குகிறது.ஒரு படத்துக்கு ஒரு பாடலாசிரியர்.... ஒரே பாடலாசிரியர் எழுதும் போது அந்தப் பாடலாசிரியருக்கும் படத்துக்கும் நல்ல விஷயம் அதுவாகத்தான் இருக்கும். ஒருவர் மட்டும் எழுதும் போது முழுமையான அங்கீகாரம் இருப்பதாக உணர்கிறேன். படத்தின் வெற்றி தோல்வியில் பங்கெடுத்துக் கொள்ள முடிகிறது. பலர் எழுதும் போது சில பாடல்கள் கவனிக்கப்படுவதில்லை. ஆனால் போட்டி ஏற்படும் போது நல்ல பாடல்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.இன்றைய பாடல்கள் வருங்கால தலைமுறையை சென்றடையுமா? வருங்காலத்துக்கு தேவையாக இருக்கும் என்றுதான் இங்கு எல்லாமே படைக்கப்படுகிறது. பட்டுக்கோட்டையாரும், கண்ணதாசனும் அமைத்த பாதைதான் இது. அந்தப் பாதையை புறக்கணித்து விட்டு யாரும் பயணிப்பதாக தெரியவில்லை. ஆனால், பழைய பாடல்களில் எல்லாமே காலத்தை கடந்து நிற்கவில்லை. இன்றைய தலைமுறையினர் பழைய பாடல்களுக்கு இன்றும் வரவேற்பு தந்து கொண்டுதான் இருக்கிறார்கள். மக்கள் சினிமாவை ஆச்சரியத்தோடு பார்த்து உள்வாங்கி கொண்ட காலத்தில் எழுதப்பட்ட பாடல்கள் அவை. ஆனால் இப்போது சினிமா பலத்த விமர்சனங்களுக்கு உள்ளாகி விட்டது. பாடல்கள் அதிகம். பாடலாசிரியர்கள் அதிகம். காலத்தை கடந்த பாடலை தருவது சவாலாக இருந்தாலும், நாளைய தலைமுறை முணுமுணுக்கும் போது அதை வெற்றியாக எடுத்துக் கொள்வோம்.தேடல் எதையெல்லாம் திரைப் பாடல்கள் இழந்ததாக நினைக்கிறேனோ அதையெல்லாம் தேடிக் கொண்டுதான் இருக்கிறேன். ""உன் சமையல் அறையில்''... (தில்) ஆரம்பித்து, ""கரிகாலன் காலப் போல''... (வேட்டைக்காரன்) என எல்லாமே தேடலில் கிடைத்ததுதான். தேடல் நின்று விட்டால் எல்லாமே முடிந்து விட்டது என்றுதான் பொருள். "தேடிக் கொண்டே இரு' என்று உடலும் மனமும் எங்கோ பயணிக்கிறது.பொக்கிஷம் என் வீட்டு நூலகத்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான புத்தகங்களில் இருந்துதான் வாழ்க்கையைப் படிக்கிறேன். அதிலிருந்துதான் பாடல்களை எழுதுகிறேன். என் வாழ்க்கையின் இறுதி நாள்கள் வரை என் கூட வரப் போவது அவைதான். எனக்கே தெரியாத எனக்கான இன்னொரு உலகத்தை திறந்து விட்டு பயணிக்க வைத்தது அந்தப் புத்தகங்கள்தான். எங்கு சென்றாலும் அந்த பயணத்தின் முடிவில் இன்னொரு புது புத்தகம் வீட்டு நூலகத்தை அலங்கரித்துக் கொள்கிறது. ""புதை குழியில் என் உடல் அருகே அந்தப் புத்தகங்களையும் போட்டு விடுங்கள்'' என உயில் எழுதி வைத்துவிட தோன்றுகிறது.
Comments
Post a Comment