சிறந்த இயக்குநருக்காக நான் பெறும் தேசிய விருதை என் குருநாதர் பாலுமகேந்திராவுக்கும் அவருடைய மனைவி அகிலாவுக்கும் சமர்ப...
சிறந்த இயக்குநருக்காக நான் பெறும் தேசிய விருதை என் குருநாதர் பாலுமகேந்திராவுக்கும் அவருடைய மனைவி அகிலாவுக்கும் சமர்ப்பிக்கிறேன் என்றார் பாலா.தேசிய விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து கேட்டபோது...""விருது பெற வேண்டும் என்ற நோக்கத்துக்காக "நான் கடவுள்' படத்தை எடுக்கவில்லை. அனைவரும் கடுமையாக உழைத்தே இந்தப் படத்தை உருவாக்கினோம்.இந்தப் படத்தில் மிகவும் சிரமப்பட்டு பணியாற்றிய கதாநாயகன் ஆர்யா, கதாநாயகி பூஜா, ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன், இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோருக்கு நிச்சயமாக விருதுகள் கிடைக்கும் என நம்பியிருந்தேன். ஆனால் விருதுக்கு என் பெயரும் ஒப்பனைக் கலைஞர் மூர்த்தியின் பெயரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பல தடைகளைத் தாண்டி இந்தப் படம் வெளியானது. விருது கிடைத்ததில் மகிழ்ச்சி என்றாலும் ஆர்யா, பூஜா, வில்சன், இளையராஜா ஆகியோருக்கு விருது கிடைக்காததில் வருத்தம்தான்.இந்த விருது, இப்போதைய தமிழ் சினிமா இயக்குநர்களுக்கும் நாளைய இயக்குநர்களுக்கும் ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. "நான் கடவுள்' போன்ற ஒரு படத்தை எடுத்தால் எடுபடுமா?' என பலரும் யோசித்திருக்கலாம். ஏனென்றால், இன்றைய உதவி இயக்குநர்கள் பலரும் இந்தப் படத்தின் கதையை விட சிறந்த கதைகளை வைத்துக்கொண்டு அவநம்பிக்கையோடு இருக்கலாம். அவர்களைப் போன்ற படைப்பாளிகளுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்து நம்பிக்கையூட்டும் விதத்தில் "நான் கடவுள்' படத்துக்கு விருது கிடைத்துள்ளது.நல்ல சினிமா என்றால் என்ன என்பதை எனக்குக் கற்றுக்கொடுத்து, நான் மிகவும் சிரமப்பட்ட நேரங்களிலெல்லாம் அன்பையும் ஆதரவையும் வழங்கி என்னை இந்த அளவுக்கு உயர்த்திய என்னுடைய குருநாதர் பாலுமகேந்திராவுக்கும் அவரது மனைவி அகிலா அம்மாவுக்கும் இந்த தேசிய விருதை சமர்ப்பிக்கிறேன்'' என்றார் பாலா.தமிழ் சினிமாவில் அகத்தியன், எடிட்டர் லெனின் ஆகியோரை அடுத்து தற்போது, பாலா சிறந்த இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.மதுரையைச் சேர்ந்த பாலா, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பயின்றவர். தான் இயக்கிய முதல் படமான "சேது' மூலம் தமிழ்த் திரையுலகில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். இதையடுத்து இவர் இயக்கிய "நந்தா', "பிதாமகன்' படங்களும் திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தின. முதல் மூன்று படங்களும் தேசிய விருதுகள் உள்பட இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளன. "நான் கடவுள்' இரண்டு தேசிய விருதுகளைப் பெற்றுள்ளது.
Comments
Post a Comment