Entertainment
›
Cine News
›
விடிய, விடிய நடந்த வருமான வரி சோதனை: சூர்யா, வடிவேலு உள்ளிட்ட 5 பேர் மீது நடவடிக்கை
சென்னை, ஜன. 20: நடிகர்கள் சூர்யா, வடிவேலு மற்றும் இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், ஏ.ஆர். முருகதாஸ் ஆகியோரின் வீடு, ...
சென்னை, ஜன. 20: நடிகர்கள் சூர்யா, வடிவேலு மற்றும் இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், ஏ.ஆர். முருகதாஸ் ஆகியோரின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் புதன்கிழமை காலை வரை விடிய, விடிய அதிரடி சோதனை நடத்தினர்.செவ்வாய்க்கிழமை தொடங்கிய இந்தச் சோதனையின் தொடர்ச்சியாக புதுச்சேரியில் உள்ள சினிமா ஃபைனான்சியரின் (படத் தயாரிப்புக்கு பண உதவி செய்பவர்) பங்களாவிலும் சோதனை நடத்தப்பட்டது.இவை தவிர மதுரை விரகனூரில், நடிகர் வடிவேலுக்குச் சொந்தமான வீட்டிலும் வருமான வரி சோதனை நடந்தது.தொடர்ந்து 26 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் ஏராளமான சொத்துகள், முதலீடுகள் குறித்த முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகத் தெரியவந்துள்ளது.இதுதொடர்பாக பல லட்சம் ரூபாய் அளவுக்கு வருமான வரி செலுத்தாததும் தெரியவந்துள்ளது.இதையடுத்து இவர்கள் 5 பேர் மீதும் வருமான வரி சட்டம் 132 பிரிவின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.சென்னையில் உள்ள வருமான வரித்துறை இயக்குநர் ஜெனரல் கே.கே. திரிபாதி (புலனாய்வுப் பிரிவு) மற்றும் இயக்குநர் ஹெச். பர்மன் ஆகியோரது தலைமையில் 65 அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழுவினர் 15 தனிப்படைகளாக ஒரே நேரத்தில் இந்த அதிரடி சோதனையைத் தொடங்கினர்.சென்னை தியாகராயநகர், அடையாறு, விருகம்பாக்கம், சைதாபேட்டை, மதுரை மாவட்டம் விரகனூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் இரவு முழுவதும் விடிய, விடிய நடந்த இந்தச் சோதனை புதன்கிழமை காலை 8.30 மணிக்கு முடிவடைந்தது.வருமான வரித்துறை அதிகாரிகள் முற்றுகையிட்ட சிறிது நேரத்தில் சூர்யா, வடிவேலு உள்ளிட்டோர் நேரில் ஆஜராகினர்.இவர்களின் முன்னிலையில் அனைத்து முக்கிய சொத்துகள், முதலீடுகள், சேமிப்புகள் ஆகியவை பட்டியலிடப்பட்டன.இதன்பின் சம்பந்தப்பட்டவர்களின் வருவாய் ஆதாரங்கள் குறித்து நீண்ட நேரம் விசாரணை நடத்தி, தகவல்கள் பதிவு செய்யப்பட்டன.விரைவில் அறிக்கை தாக்கல்: 26 மணி நேரம் நடந்த இந்தச் சோதனை குறித்த முழு விவர அறிக்கையையும் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இன்னும் சில வாரங்களில் வருமான வரி மதிப்பீட்டுக் குழுவிடம் தாக்கல் செய்ய உள்ளனர்.இதன்பின் வரி நிலுவைத் தொகையை அபராதத்துடன் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.வருமான வரி சோதனையை அடுத்து வடிவேலு, சூர்யா ஆகியோர் தொடர்பான படப்பிடிப்பு பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.வருமான வரி அதிகாரிகள் கைப்பற்றிய சில முக்கிய சான்றுகள் மூலம் மேலும் சில சினிமா பிரமுகர்கள் சிக்குவார்கள் எனத் தெரிகிறது.
Comments
Post a Comment