32 ரசிகர்களுக்கு இலவச வீடு கட்டி தரும் ரஜினி!



ரஜினிக்கு உண்மையான ரசிகர்களாக இருந்தவர்கள், இப்போது அதற்குரிய பலனை அனுபவிக்கும் நேரம் போலிருக்கிறது!

தனது கேளம்பாக்கம் பண்ணை வீட்டுக்குப் பக்கத்திலேயே 1 ஏக்கர் நிலத்தை ரசிகர் மன்ற நிர்வாகிகள் 32 பேருக்கு இலவசமாகக் கொடுத்துள்ள ரஜினி, அதில் அவர்களுக்கு தனது சொந்த செலவில் வீடும் கட்டித் தருகிறார்.

கேளம்பாக்கம் பண்ணை வீடுதான் இப்போது ரஜினி பெரும்பாலும் தங்கும் இடம். இந்த வீட்டுக்குப் பின்புறம் உள்ள ஒரு ஏக்கர் நிலத்தை, அரை கிரவுண்டுகளாக சமமாககப் பங்கிட்டு, ஆரம்பத்திலிருந்து தன்னை நம்பி உடன் வந்த ரசிகர் மன்ற நிர்வாகிகள் 32 பேருக்குக் கொடுக்க உத்தரவிட்டுள்ளார். அதன் படி ராகவேந்திரா மண்டப நிர்வாகிகள் மிக சமீபத்தில் பிரித்துக் கொடுத்துள்ளனர்.

அத்துடன் நில்லாத ரஜினி, அவர்களுக்கு ஒரு இனிய அதிர்ச்சியையும் தந்துள்ளார். அனைவருக்கும் தனது சொந்த செலவில் வீடு கட்டித் தருவதாகவும் அறிவித்துள்ளார்.

கேளம்பாக்கம் பகுதியில் கிரவுண்ட் விலை கோடியைத் தாண்டி விற்பனையாகும் இந்தக் காலத்தில் அரை கிரவுண்ட் நிலம் என்பது சாமானியர்களால் நினைத்துப் பார்க்க முடியாத கனவாகும். அதிலும் வீடு கட்டுவதெல்லாம் எவ்வளவு பெரிய விஷயம்?

தங்களுக்காக இவ்வளவு செய்த தங்கள் தலைவரின் பெயரில் இந்தப் பகுதி அமைய வேண்டும் என்பதற்காக ரஜினி அவென்யூ என பெயர் சூட்டியுள்ளனர் ரசிகர்கள். ஆனால் 'இதெல்லாம் வேண்டாம்பா... இந்தப் பெயர் வைக்கலேன்னா நீங்க என் நண்பர்கள் இல்லேன்னு ஆகிடுமா?' என்று தன் பாணியில் கேட்ட ரஜினி, பெயர் வைக்க மறுப்பு தெரிவித்துள்ளாராம்‍‌!

Comments

Most Recent