விஷ்ணு...ரஜினியின் 'ஆப்தமித்ரன்'!



கன்னட நடிகர் விஷ்ணுவர்தனும் தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினியும் மிக நெருங்கிய நண்பர்கள், சினிமாவுக்கு அப்பாலும்.

பல்வேறு நெருக்கடியான தருணங்களில் இருவரும் ஒருவருக்கொருவர் உறுதுணையாக நின்றுள்ளனர்.

காவிரிப் பிரச்சனையில் பெங்களூரில் ரஜினிக்கு எதிராக எழுந்த சூழ்நிலையை தணிக்க விஷ்ணுவர்தன், அம்பரீஷ் போன்றவர்கள் எப்போதும் ரஜினிக்குத் துணையாக நின்றனர். ஆனாலும் அதை அவர்கள் வெளிப்படையாக காட்டிக் கொள்ளவில்லை, அதனால் சில பிரச்சனைகள் வரும் என்று தெரிந்ததால்.

விஷ்ணுவர்தனை தமிழில் மறு அறிமுகப்படுத்தியவர் ரஜினிதான். நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் ரஜினியும் இணைந்து நடித்த விடுதலை (குர்பானி ரீமேக்) படத்தில், இன்னொரு நாயகனாக அவருக்கு அறிமுகம் தந்தவர் ரஜினி

ரஜினியின் மற்றொரு படமான ஸ்ரீராகவேந்திரரில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பார் விஷ்ணுவர்தன்.

ஆனால் தொடர்ந்து தமிழில் அவருக்கு குறிப்பிடத்தக்க படங்கள் அமையாமல் போய்விட்டது.

பாபாவுக்குப் பின் படங்கள் செய்யாமல் அமைதியாக இருந்த ரஜினியை, பெங்களூருக்கு அழைத்து தனது ஆப்தமித்ரா (ஆப்த நண்பன்) படத்தைப் பார்க்கச் செய்தார் விஷ்ணுவர்தன். படம் பார்த்தபிறகு, அமைதியாக சென்னை திரும்பிய ரஜினி, பின்னர் அதை சந்திரமுகியாக எடுத்ததும், அந்தப் படம் வரலாறு படைத்ததும் ரசிகர்கள் அறிந்ததே.

சமீபத்தில் குசேலன் பிரச்சனை பெரிதாக வெடித்தபோது, ரஜினிக்கு பக்கபலமாக இருந்தவர்கள் கர்நாடக பிலிம்சேம்பர் தலைவரான ஜெயமாலா, ராக்லைன் வெங்கடேஷ் மற்றும் விஷ்ணுவர்தன்தான்.

கன்னட திரையுலகின் பவள வி்ழா கொண்டாட்டங்களின் போது, ரஜினி- கமலை சிறப்பு விருந்தினர்களாக அழைக்கச் செய்து மரியாதை செய்ததில் விஷ்ணுவர்தனுக்கும் பங்கிருந்தது.

ரஜினியும் விஷ்ணுவர்தனும் கடைசியாக சந்தித்தது, சென்னையில் நடந்த அந்தக் கால நட்சத்திரங்களின் 'ப்ளாஷ்பேக் விருந்து' நிகழ்ச்சியில்தான். இடையில் ரஜினியுடன் எந்திரனில் நடிக்கிறார் விஷ்ணுவர்தன் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் அதுபற்றி பின்னர் எந்தத் தகவலும் இல்லை.

ஆப்தமித்ராவின் இரண்டாம் பாகமான ஆப்தரக்ஷகா வெளியீட்டுக்குத் தயாராகி வரும் நிலையில், அந்தப் படத்தைப் பார்க்க ரஜினி ஆர்வமாக இருந்தார். ஆனால் யாருமே எதிர்பாராமல் விஷ்ணுவர்தன் இயற்கையெய்திவிட்டார்.

விஷ்ணுவின் மரணச் செய்தி கேட்டதும் அதிர்ச்சியடைந்த ரஜினி, சில நிமிடங்கள் பேசாமல் மௌனமாகிவிட்டாராம்.

எந்திரன் படப்பிடிப்பை தள்ளி வைத்துவிட்டு, தனது ஆப்த நண்பனுக்கு நேரில் அஞ்சலி செலுத்த பெங்களூர் விரைந்தார் ரஜினி.

Comments

Most Recent