விண்ணை தாண்டி வருவாயா குழுவின் 'காமெடி!'



ஏஆர் ரஹ்மான் இசையமைத்த விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் பாடல்கள் சில தினங்களுக்கு முன் லண்டனில் வைத்து வெளியிடப்பட்டது.

அடுத்த நிமிடமே படத்தின் பாடல்கள் இணையத்தில் ஒலிக்கத் துவங்கிவிட்டன. ஆடியோ ரிலீஸுக்கு முன்பே 'ஓஸனா...' என்ற பாடல் வெளியாகியிருந்தது நினைவிருக்கலாம்.

இந் நிலையில், படக் குழுவினரிடமிருந்து ஒரு எச்சரிக்கைக் கடிதம் வந்தது இன்று.

இணையத்தில் சட்டவிரோதமாக விண்ணைத் தாண்டி வருவாயா பாடல்கள் பரப்பப்படுவதாகவும், இத்தகைய சட்டவிரோத சக்திகள் மீது சைபர் கிரைமில் புகார் செய்யப்படும் என்றெல்லாம் அதில் எச்சரிக்கப்பட்டிருந்தது. மேலும் வருகிற ஜனவரி 10 ம் தேதிதான் இந்தப் பாடல்கள் தமிழகத்தில் விற்பனைக்கு வரும் என்றும் கூறியுள்ளனர்.

இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான சமாச்சாரம், இந்தப் பாடல்களை இனி யாரும் லீக் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. காரணம், படத்தின் இசையமைப்பாளர் ரஹ்மானின் இணைய தளத்திலேயே இந்தப் பாடல்களைக் கேட்டு மகிழலாம்.

இது தெரியாமலேயே, படக்குழுவினர் எச்சரிக்கை விட்டதுதான் உச்சகட்ட காமெடி!.

Comments

Most Recent