தமிழ்திரையுலகின் இன்றைய இசையமைப்பாளர்களின் வயசு இருபதுக்குள்ளே !

வெயிலோடு விளையாடி... பாடலையும் அது தந்த தாக்கத்தையும்  தமிழ் சினிமா இசையின் ரசிகர்கள்  இன்னும் மறந்துவிடவில்லை. இந்த பாடலை ஜி.வி பிரகாஷ்  மெட்டமைத்தபோது அவரது வயது 18. ஜி.வி. பிரகாசுக்கு கிடைத்த வரவேற்பும் வெற்றியும் இன்று இருபது வயது இசை அமைப்பாளர்களின் வருகையை அதிகரிக்கச்செய்திருக்கிறது.

இவரை அடியொற்றி இளம் வயதிலேயே களம் இறங்யிருக்கும்  இன்னொரு  இசை அமைப்பளார் போபோ சசி. குளிர் 100 டிகிரி படத்துக்கு இசை அமைத்த இவர், தேவாவின் தம்பி முரளியின்(சபேஷ்-முரளி) மகன். நடிகை பூமிகா தயாரித்து வரும் 'தகிட தகிட' தெலுங்குப் படத்துக்கு தற்போது இசை அமைத்து வருகிறார்.
அடுத்து பின்னனிப்  பாடகி அனுராதா ஸ்ரீராமின் தம்பி முரளி மோகன்.

இவர் 'எதிர்மறை' படத்துக்கு இசை அமைத்து வருகிறார். திரையிசைத்துறையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக  அடிப்படை இசையறிவு இல்லாதவர்கள்கூட இசை அமைப்பாளராகிவிடும் சூழல் ஆச்சர்யகரமானதுதான். காரணம் எம்.எஸ்.வி, எம்.குமார், எல். மகாதேவன் போன்றவர்கள் கோலோச்சிய காலகட்டத்தில் புதிதாய் ஒரு திறமையை அனுமதிக்க மறுத்த திரையுலகில் நுழைய இளையராஜா சகோதரர்கள் போராடியது ஒரு ஆண்டோ இரு ஆண்டோ அல்ல. எட்டு ஆண்டுகள். ஆனால் இன்று துளியளவு திறன் இருந்தால் போதும், எளிதாக உள்ளே வரலாம்.

அந்த வகையில் இந்த 2009-ஆம் ஆண்டில் 45 புதிய இசை அமைப்பாளர்கள் தங்கள் இசைப் பயணத்தை தொடங்கியிருக்கிறார்கள். இவர்களில் 24 பேர் இருபத்தைந்து வயதை எட்டாதவர்கள். என்றாலும் இவர்களில் நினைவில் நிற்கும் இனிய இசையை தந்திருப்பவர்கள் சொற்பமே.

வெண்ணிலா கபடிக்குழு - வி.செல்வகணேசன்,

யாவரும் நலம்- சங்கர் சென்ட்ராய்,

குளிர் 100 டிகிரி- போபோ சசி,

மோதி விளையாடு-ஹரிகரன்,லெஸ்லி,

ஈரம்-தமன்,

உன்னைப்போல் ஒருவன்- ஸ்ருதி கமல்,

ரேனிகுண்டா-கணேஷ் ராகவேந்திரா ஆகியோர்.

இவர்களோடு புதிதாக அறிமுகமாக இருக்கும் இளைய இசைஞர்களும் தொடர்ந்து பெருகியபடியே இருக்கிறார்கள். சில்லுண்ணு ஒரு காதல் பட இயக்குனர் தற்போது இயக்கி வரும் 'என்னை ஏதோ செய்து விட்டாய்' படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் இளைஞர் இதயாவுக்கு அறிமுகப்படமே வெளியாகத நிலையில் வெள்ளைக் குதிரையில் ராஜகுமாரன், வியூகம் படங்களுக்கு இசைஅமைத்து வருகிறார்.

ஆக உங்களுக்கு வயது இருபதைத் தாண்டியிருக்கக் கூடாது, கொஞ்சம் தொழில்நுட்ப அறிவு, கொஞ்சம் இசைஅறிவு இருந்தால் போதும் கோடம்பாக்கத்தில் நீங்களும் பிஸியான கம்போஸர் ஆகிவிடலாம். அப்புறமென்ன அடுத்த ஆண்டே நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் கலைமாமணி உங்களை தேடிவரும் என்கிறார் கோடம்பாக்கத்தில் இந்தக் கூத்தைப் பார்த்து நொந்து போன ஒருவர்.

Comments

Most Recent