ஆயிரம் வதந்திகள்

"மகாதீரா' படத்துக்குப் பின் தெலுங்கு உலகில் சூடு பிடிக்கிறது காஜல் அகர்வாலின் மார்க்கெட்.​ தமிழில் கார்த்தியுடன் "நான் மகான் அல்ல' படத்தில் நடித்து வருகிறார்.

"மகாதீரா' ஹிட்டால் சினிமா வாழ்க்கை...

எப்போதும் போலவே சினிமாக்களில் நடித்து வருகிறேன்.​ இப்போது எந்த அளவும் நான் மாறவில்லை.​ மாற்றங்கள் இல்லாமல் பொறுப்பு மட்டும் கூடியிருக்கிறது.​ எதிர்காலங்களில் ரசிகர்களை ஏமாற்றாமல் திருப்தி அடைய வைக்க வேண்டும்.​ அதற்காக முன்பை விட கதைகள் கேட்பதில் கவனம் செலுத்துகிறேன்.​ இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் என இந்த வெற்றி சொல்லியிருக்கிறது.​ வெற்றி பெறுகிற போது நிச்சயம் அதைவிட பெரிய வெற்றி வேண்டும் என்று மட்டும் தெரிகிறது.

சம்பளத்தை ஏற்றி விட்டதாக தகவல்....

சம்பளம் பற்றி வந்த செய்திகளை நானும் படித்தேன்.​ அப்படி எதுவும் இல்லை.​ படங்கள் மற்றும் நிறுவனங்களைப் பொறுத்தே சம்பளம் வாங்குகிறேன்.​ கால்ஷிட் நாள்களின் எண்ணிக்கை அதிகமாகும் போது அதற்கு பட நிறுவனங்களே சம்பளத்தை உயர்த்தி தந்து விடும்.​ கால்ஷிட்டுக்கு ஏற்றவாறுதான் என் சம்பளம் இருக்கிறது.​ மற்றபடி சம்பளத்தை உயர்த்தும் அளவுக்கு வாழ்க்கையில் எதுவும் நடக்கவில்லை.​ எப்போதும் போல்தான் இருக்கிறேன்.

பட வாய்ப்புக்காக ஹன்சிகாவுடன் ஏற்பட்ட போட்டி...

"மகாதீரா' படத்தில் நடிக்கும் போதே "சண்டி' எனும் பட வாய்ப்பு கிடைத்தது.​ கதை பிடித்திருந்ததால் ஓகே சொல்லி விட்டேன்.​ ஹீரோயினை சார்ந்த படமாக இருந்ததால் அந்தப் படத்தில் நடிக்க பிடித்திருந்தது.​ "அருந்ததீ' ஹிட்டுக்குப் பின் கோடி ராமகிருஷ்ணாதான் படத்தை இயக்குகிறார்.​ ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமிது.​ வில்லனுக்கு எதிராக போராடும் பெண்ணின் கதைதான் கரு.​ ஷூட்டிங்கும் தொடங்கி நடந்து வருகிறது.​ அதற்குள் அந்தப் படத்துக்காக ஹன்சிகாவும் நானும் போட்டியிடுவதாக யாரோ கிளப்பி விட்டியிருக்கிறார்கள்.​ இது மாதிரி ஆயிரம் வதந்திகளுக்கு நான் பதில் சொல்லி விட்டேன்.

"நான் மகான் அல்ல'...

காமெடி கலந்த காதல் படம்.​ காதல் இருக்கிற அளவுக்கு ஆக்ஷனும் இருக்கும்.​ "வெண்ணிலா கபடி குழு' சுசீந்திரன் இயக்குகிறார்.​ கார்த்தி ஜோடியாக நடிக்கிறேன்.​ ஆர்ப்பாட்டமில்லாமல் படப்பிடிப்பு நடந்து வருகிறது.​ சென்னை உள்ளிட்ட பகுதிகளில்தான் ஷூட்டிங் நடந்து வருகிறது.​ நான் நடித்த தமிழ் சினிமாக்களில் இந்தப் படம் ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பிடித்து தரும்.

தமிழில் பிரேக் எப்போது?

பிரேக் கொடுக்கிற அளவுக்கு இன்னும் படம் அமையாததுதான் காரணம்.​ "நான் மகான் அல்ல' அந்த குறையைப் போக்கி நிச்சயம் தமிழ் சினிமாவில் ஒரு நிலையான இடத்தைக் கொடுக்கும் என நினைக்கிறேன்.​ கதையின் மீதான நம்பிக்கையில்தான் இந்த வார்த்தைகளைச் சொல்லுகிறேன்.​ தமிழ் சினிமாவில் இன்னும் நான் அதிக கவனம் செலுத்தவில்லை எனவும் சொல்லலாம்.​ அதற்குக் காரணம் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்துவதுதான்.​ இனி தமிழில் கவனம் இருக்கும்.

Comments

Most Recent