புரொடக்ஷன் மேனேஜருடன் கைகலப்பு: விஜயலட்சுமி காயம்!



'ஆர்யா' நடிக்கும் படத்தின் ஷூட்டிங்கில் கேரவன் கேட்டு, அது தரப்படாத கோபத்தில் புரொடக்ஷன் மேனேஜருடன் கைகலப்பில் இறங்கினார் நடிகை விஜயலட்சுமி (சன் டிவியில் தங்க வேட்டை நிகழ்ச்சி நடத்தியவர்)

சில ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழில் சில படங்களில் நாயகியாக நடித்தவர் விஜயலட்சுமி. பெங்களூரைச் சேர்ந்த இவர் பிரெண்ட்ஸ் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். எஸ் மேடம் படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக நடித்தார்.

இப்போது மார்க்கெட் போன நிலையில், நயன்தாராவுக்கு அக்காவாக பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நடிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் நடந்து வருகிறது.

நேற்றைய ஷூட்டிங்கின்போது, தனக்கு தனியாக கேரவன் கொடுத்தால்தான் நடிக்க முடியும் என அடம்பிடித்தாராம் விஜயலட்சுமி. ஆனால் புரொடக்ஷன் மேனேஜர் ரமணா என்பவரோ, ஹீரோயினுக்குதான் கேரவன். உங்களுக்குத் தரமுடியாது என்று கூறிவிட்டாராம்.

இதனால் ஆத்திரத்தில் மேனேஜரை விஜயலட்சுமி திட்ட, பதிலுக்கு அவரும் திட்ட, ஒரு கட்டத்தில் இருவரும் கை கலப்பில் இறங்கிவிட்டனராம்.

முதலில் விஜயலட்சுமி மேனேஜரை அடித்ததாகவும், பதிலுக்கு ரமணாவும் விஜயலட்சுமியை பலமாக அடித்துவிட்டதாகவும், இதில் விஜயலட்சுமிக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து விஜயலட்சுமி திருவிடைமருதூர் போலீஸில் புகார் செய்ய, உடனடியாக சம்பவ இடத்துக்கு போலீஸ் விரைந்தது. பின்னர் இயக்குநரும், தயாரிப்பாளரும் தலையிட்டு பிரச்சனையை சுமூகமாக முடித்துக் கொள்வதாக போலீசாரிடம் கூறியுள்ளனர்.

இந்ந நிலையில், புரொடக்ஷன் மேனேஜர் யூனியன் நிர்வாகிகள், விஜயலட்சுமி மன்னிப்புக் கேட்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இன்று இருதரப்புக்கும் சமாதானப் பேச்சு வார்த்தை நடக்கிறது.

முன்பு சன் டிவியில் தங்க வேட்டை நிகழ்ச்சி நடத்தியவர் தான் விஜயலட்சுமி. இந்த நிகழ்ச்சி படமாக்கப்பட்ட போதும் அதன் இயக்குநர் விஜயலட்சுமியை அடித்துவிட, அதனால் பெரிய பிரச்சினை ஏற்பட்டது நினைவிருக்கலாம். இவருக்குப் பிறகுதான் அந்த நிகழ்ச்சியை ரம்யா கிருஷ்ணன் நடத்தினார்.

Comments

Most Recent