மோகன்பாபு மகன் ஷூட்டிங்கில் தாக்குதல் - தெலுங்குத் திரையுலகம் கொதிப்பு



நடிகர் மோகன்பாபுவின் மகன் படப்பிடிப்பில் தெலுங்கானா போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதற்கு தெலுங்குத் திரையுலகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஹைதராபாத் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறும் தெலுங்குப் படப்பிடிப்புத் தளங்களுக்குள் புகுந்து தெலுங்கானா போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளனர்.

சமீபத்தில் மோகன்பாபுவின் மகன் பட ஷூட்டிங்கில் சரமாரி தாக்குதல் நடத்தப்பட்டது.

இதற்கு ஆந்திர மாநில தொழில் வர்த்தக சபை, தயாரிப்பாளர் சங்கம், ஹைதராபாத் திரைப்பட வர்த்தக சபை, திரைப்படக் கலைஞர்கள் சங்கம், ஆந்திர திரைப்பட ஊழியர் சம்மேளனம் ஆகியவை கண்டனம் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து இந்த அமைப்புகள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், திரையுலகம் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் சொந்தமானதல்ல. அரசியல் சார்பற்ற ஒரு துறை இது. ஆனால் திரைத் துறையினர் மீது சமீப காலமாக தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

இது கண்டனத்துக்குரியது. இது நிறுத்தப்பட வேண்டும் என்று கோரியுள்ளனர்.

கிருஷ்ணா மகன் பட செட் எரிப்பு

தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் மகன் மகேஷ் நடித்து வரும் படத்துக்காக போடப்பட்ட ரூ. 2 கோடி மதிப்பிலான சினிமா செட்டை தெலுங்கானா போராட்டக்காரர்கள் தீவைத்துக் கொளுத்தி நாசமாக்கி விட்டனர்.

பிரபல தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் மகன் மகேஷ்பாபு நடிக்கும் கிலாடி என்ற படம் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார்.

இந்த படத்துக்காக விக்ரமாபாத்தில் ரூ.2 கோடி செலவில் ராஜஸ்தான் மாநில கிராமிய சூழ்நிலையை பிரதிபலிக்கும் செட் போடப்பட்டிருந்தது. கடந்த ஒரு மாதமாக நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் அரும்பாடுபட்டு அந்த கிராமிய அரங்கை உருவாக்கி இருந்தனர்.

இந்த நிலையில், படப்பிடிப்பு தொடங்கும் முன்பு தெலுங்கானா ஆதரவு போராட்டக்காரர்கள் சிலர் அங்கு வந்தனர். மண்எண்ணை ஊற்றி படப்பிடிப்பு அரங்குக்கு தீ வைத்தனர். இதில் ரூ.2 கோடி செட் முழுமையாக எரிந்து நாசமானது.

படப்பிடிப்பு அரங்குக்குள் நிறுத்தப்பட்டிருந்த லாரி, கார்களும் எரிந்து சேதமடைந்தது.

மோகன்பாபு பள்ளி சூறை

அதேபோல, தெலுங்கானா ஆதரவாளர்கள் நடிகர் மோகன்பாபுவின் பள்ளிக்கூடம் ஒன்றையும் அடித்து சூறையாடினார்கள்.

இரு சம்பவங்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Comments

Most Recent