தெலுங்குப் படப்பிடிப்புகளுக்கு மெட்ராஸ் தான் பெஸ்ட் -மோகன்பாபு



சட்டம் ஒழுங்கை பார்த்துக் கொள்வதிலும் சரி, கலைகளையும் கலைஞர்களையும் மதிப்பதிலும் சரி, மெட்ராஸ்தான் பெஸ்ட். எனவே மீண்டும் தெலுங்குப் படப்பிடிப்புகள் அனைத்தையும் சென்னையிலேயே நடத்தலாம் என்கிறார் நடிகர் மோகன்பாபு.

தெலுங்கானா போராட்டம் காரணமாக ஆந்திராவே கொந்தளித்துப் போயுள்ளது. மக்களின் சாதாரண வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இன்னொரு பக்கம் திரைப்படத் துறையும் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வருகிறது.

தலைநகர் ஹைதராபாதில் படப்பிடிப்பே நடக்க முடியாத சூழ்நிலை. சில நாட்களுக்கு முன்பு மோகன்பாபு மகன் நடித்த படப்பிடிப்பில் புகுந்து தெலுங்கானா கட்சி தொண்டர்கள் ரகளை செய்தனர்.

ரங்கா ரெட்டி மாவட்டத்தில் விக்ராபாத்தில் நடிகர் மகேஷ் பாபு நடிக்கும் படத்திற்காக போடப்பட்டிருந்த ரூ.2 கோடி மதிப்புள்ள செட்டையும் தீ வைத்து கொளுத்திவிட்டனர் கலவரக்காரர்கள்.

நேற்று ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் பிருந்தாவனம் படப்பிடிப்பு பழைய ஹைதராபாத் நகரில் நடந்தது. அப்போது தெலுங்கானா கட்சி தொண்டர்கள் புகுந்து ரகளை செய்ததால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

ஹைதராபாத்தில் இதுபோன்ற பாதுகாப்பற்ற நிலை தொடர்வதால், மீண்டும் சென்னையிலேயே தெலுங்குப் படப் பிடிப்புகளை வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளனர் தெலுங்கு திரைப்படத் துறையினர்.

"சென்னையில் சட்டம் ஒழுங்கு மிகவும் நன்றாக இருப்பதால் படப்பிடிப்பை அங்கு நடத்தினால் நல்லது" என்று நடிகர் நடிகைகளும் கூறி உள்ளனர்.

ஆரம்ப காலங்களில் முழுக்க முழுக்க தெலுங்குப் படங்கள் சென்னையில்தான் தயாராகின. மலையாளம், கன்னடம் மற்றும் இந்திப் படங்களும் இங்கே தயாராகின. தொன்னூறுகளின் ஆரம்பம் வரை பல தெலுங்குப் படங்கள் சென்னையிலேயே தயாராகி வந்தது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி மோன்பாபு கூறும்போது, "மெட்ராஸ்தான் என்னை வளர்த்தது. நான் எப்பவுமே சொல்வேன், 'மெட்ராஸ் மக்களுக்குதான் கலைஞர்களின் அருமை தெரியும், அவர்களை மதிக்கத் தெரியும்...' என்று. மனிதநேய மிக்க மக்கள் அவர்கள்.

இப்போது மீண்டும் நான் சொன்னது நிஜமாகியுள்ளது. படப்பிடிப்புகளை இனி சென்னையில் நடத்துவதுதான் சிறந்தது. அந்த மாநில அரசு நல்ல மரியாதையும் உரிய சலுகையும் தரத் தயாராக உள்ள நிலையில், நாம் தற்காலிகமாக சென்னைக்கு செல்வதே சிறந்தது. தமிழகத்தில் சிறந்த அவுட்டோர் பகுதிகள் உள்ளன. நமக்கு மிகவும் பாதுகாப்பான மாநிலம் அது" என்றார்.

மோகன் பாபுவுக்கு சென்னையில் சொந்த வீடுகள் உள்ளன. தமிழகத்தில் நிறைய சொத்துக்களும் உள்ளன. சிரஞ்சீவி, மகேஷ்பாபு, வெங்கடேஷ் போன்றவர்களுக்கும் இங்கே சொந்த வீடுகள் உள்ளன.

Comments

Most Recent