கந்தசாமி 100... கலைஞர்களுக்கு கேடயம் கொடுத்த கிராம மக்கள்!



கந்தசாமி படத்தின் நூறாவது நாள் விழா வியாழக்கிழமை சென்னையில் நடந்தது. கந்தசாமி படக்குழுவால் தத்தெடுக்கப் பட்ட கிராமத்தைச் சேர்ந்த மக்கள் இந்த விழாவில் பங்கேற்று, விக்ரம், ஸ்ரேயா உள்ளிட்ட கலைஞர்களுக்கு கேடயம் வழங்கினர்.

கலைப்புலி தாணு தயாரிப்பில், விக்ரம்-ஸ்ரேயா நடித்து, சுசி கணேசன் இயக்கிய படம் கந்தசாமி. பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்த இந்தப் படம் 'ஒருவழியாக' 100 நாள் என்ற கோலிவுட்டின் வெற்றி இலக்கைத் தொட்டது.

கந்தசாமி 100-வது நாள் விழா தி நகரில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நேற்று இரவு நடந்தது.

விழாவில் கந்தசாமி படக்குழுவினர் தத்தெடுத்திருந்த தேனி அருகில் உள்ள வன்னிவேலம்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த மக்கள் திரளாகக் கலந்து கொண்டார்கள்.

படத்தில் நடித்த நடிகர்கள் விக்ரம், நடிகை ஸ்ரேயா, இயக்குநர் சுசிகணேசன், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம், மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு மற்றும் படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வன்னிவேலம்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கேடயங்களை வழங்கினார்கள்.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் வி.சி.குகநாதன், இயக்குநர் பாக்யராஜ், நடிகர் விக்ரம் தந்தை வினோத்ராஜ் ஆகியோர் பேசினர்.

Comments

Most Recent